6 மாநில கலவரம்: சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கோரி மனு

6 மாநில கலவரம்:  சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கோரி மனு
X
டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாக்களில் கலவரங்கள் நடந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 6 மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த கலவர சம்பவத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'மத ரீதியாக நாடு முழுவதும் பல்வேறு கலவரம், வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாக்களில் கலவரங்கள் நடந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக மத ரீதியாக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் நேரடியாக இவ்வழக்கை கண்காணிக்க வேண்டும். சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, விரைவில் இம்மனு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture