500 சமுதாய உணவகங்கள் "கலைஞர் உணவகம்" என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன: டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி

500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன: டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி
X
தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது -டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

இந்தியா முழுவதும் மாதிரி சமூதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த புதுதில்லியில் இன்று (25.11.2021) மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர், சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:

நம் நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலையை போக்குவதற்காக மாதிரி சமூக உணவகம் அமைக்கும் திட்ட உருவாக்கம், அதன் செயலாக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை, குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரங்கில் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்காக அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது. 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிகுந்த உணவினைப் பெறும் வகையில் 2007-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா ரூபாய் 4000 ரொக்கத்தையும் கொரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது.

வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 2022 ஜனவரி மாதத்தில் 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1161 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளி நோயாளிகளின் நலன் கருதி நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார் கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1.6.2021 முதல் 18.11.2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர். 30,490 கட்டுமானத் தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்த்து) இதே காலகட்டத்தில் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் "கலைஞர் உணவகம்" என்ற பெயரில் அமைக்க பட உள்ளன.

இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 இலட்சம் செலவிடப்படுகிறது.

இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் ஒன்றிய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

21.09.2021 அன்று ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்த போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாய பெருங்குடி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரியில் 1 லட்சம் டன்னை அருகிலுள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்கவேண்டுமென்று அன்று நான் விடுத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் அன்புத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசுடனும் பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக் குறைவில்லா நாடாக மாற்றத் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதி அளிக்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல்த்துறை ஆணையர் வி.ராஜாராமன், இ.ஆ.ப. உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா