மத்திய பட்ஜெட்டில் 300-400 வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்க வாய்ப்பு
வந்தே பாரத் அதிவேக ரயில்.
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் உருவாக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவு ரயில், இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் சென்னை, ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் சுமார் 18 மாதத்தில் உருவானது. இந்த ரயில் ஒன்று ஆகும் தயாரிப்புச் செலவினமானது ரூ.100 கோடியாகும். தற்போது நாடு முழுவதும் 5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கிவைத்துள்ளார். கடந்த 10ம் தேதி சென்னை சென்ட்ரல்- மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மத்திய பட்ஜெட்டில் மேலும் 300-400 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2023-24-ல் மேலும் 300-400 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த அதிவேக ரயிலின் முதல் "ஸ்டாண்டர்ட் கேஜ்" (SG) பதிப்பை தயாரிக்கவும் இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வழி வகுக்கும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்களின் அறிவிப்பு, அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 475 அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்துடன் கூடுதலாக இருக்கும். வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கவும் ஆண்டுதோறும் இதுபோன்ற 300-400 ரயில்களை அனுமதிப்பதே இறுதி நோக்கம் என்று மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதுள்ள தண்டவாளங்களில் வேகத்தை அதிகரிக்க இந்த ரயில்களின் வடிவமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டுக்குள் சாய்க்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய (tilting technology) முதல் ரயில் பெட்டிகளை இந்தியா பெறும் என்று ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 475 ரயில்களில் கிட்டத்தட்ட 100 வந்தே பாரத் ரயில்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இது வளைவுகளில் ரயில்களை அதிக வேகத்தில் இயக்க உதவுகிறது.
படுக்கை வசதிகளுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். தற்போது, இந்த ரயில்கள் அனைத்தும் அகலப்பாதை நெட்வொர்க்காக உள்ளன. "SG நெட்வொர்க்கில் இயங்கக்கூடிய இந்த ரயில்களை நாங்கள் உற்பத்தி செய்வோம். தேவையான சோதனைகளை மேற்கொள்வதற்காக மணிக்கு 220 கி.மீ. வேகத்துடன் இயக்கக்கூடிய ஒரு சோதனைத் தடம் ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கக்கூடிய நிலையை பெற்றவுடன், இது உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu