பொதுமக்களின் புகார்களுக்கு 30 நாளில் தீர்வு: மத்திய அரசு அறிவிப்பு

பைல் படம்.
Public Complaint-மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறை, 'மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையம்' என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. அதில், அரசுத்துறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்வரை, அதில் 13 லட்சத்து 32 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 4 லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மைய இணையதளத்தில் பெருமளவிலான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அந்த இணையதளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய அதிகபட்ச காலஅளவு 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்படுகிறது. ஒருவேளை, கோர்ட்டு வழக்கு அல்லது கொள்கை முடிவு காரணமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண முடியாவிட்டால், பொதுமக்களுக்கு இடைக்கால பதில் ஒன்றை அளிக்க வேண்டும்.
புகார்கள் மீது அளிக்கப்படும் தீர்வில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லாவிட்டல், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. அந்த மேல்முறையீடு வராதபட்சத்தில்தான், சம்பந்தப்பட்ட புகார் முடிவடைந்து விட்டதாக கருதப்பட வேண்டும். மேல்முறையீடு தாக்கல் செய்து, அதற்கும் தீர்வு காணப்பட்ட பிறகுதான், அந்த புகார் முடிந்து விட்டதாக கருதப்பட வேண்டும். அதன்பிறகு பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
அரசின் கால்சென்டர்கள், மக்களை தொடர்பு கொண்டும் கருத்தை கேட்கலாம். அந்த கருத்தை, சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டு, அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம். குறைதீர்ப்பு பணிகளை அமைச்சகங்கள் அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து மத்திய அரசுகளும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு போதிய அதிகாரம் அளிக்க வேண்டும்.
புகார்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிகமான அதிகாரிகளை நியமிக்கலாம். எந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை அவர்களே முடிவு செய்யலாம். பொதுமக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu