‘ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை’ டி.ஆர்.எம். எச்சரிக்கை
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கோட்ட மேலாளர் அன்பழகன் வழங்கினார்.
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் பெறுவது பட்டாசு. இந்த பட்டாசுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது எப்படி என்பதில் ஏராளமான விதிமுறைகள் உள்ளன. பட்டாசு எளிதில் வெடிக்க கூடிய ஒரு பொருள் என்பதால் அதனை பஸ், ரயில் போன்றவற்றில் எடுத்துச் சென்றால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்க நேரிடும் என்பதால் பட்டாசுவுடன் பஸ், ரயில் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மறைத்து வைத்தாவது பட்டாசுகளை பஸ், ரயில்களில் மக்கள் கொண்டு செல்கிறார்கள். இதனை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தலைமையில், முதுநிலை வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.அந்த துண்டு பிரசுரங்களில் பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு ஒத்துழைக்கும் படி வாசகங்கள் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பயணிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து கூட விதிக்கப்படலாம். பட்டாசு மட்டுமின்றி எப்போதுமே மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி கியாஸ் சிலிண்டர் போன்றவற்றையும் எடுத்துச் செல்லக்கூடாது .
சமீபத்தில் மதுரை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ரயில் பெட்டியே எரிந்து போன சம்பவம் நடந்துள்ளது. ஆதலால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கேஸ் சிலிண்டர்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது. அத்துடன் ரயில் பயணங்களின் போது செல்போன் சார்ஜ் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிளக்குகளில் சிலர் வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதுவும் தவறாகும்.
இது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில் பெட்டிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தொங்கிக்கொண்டு செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் பயணிகள் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தண்டவாளங்களை கடந்து செல்லும் போதும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கோட்ட மேலாளர் அன்பழகன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu