2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும்: இஸ்ரோ தலைவர்

2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும்: இஸ்ரோ தலைவர்
X

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும் என இஸ்ரோ தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக் கோள் இந்தியாவின் முதலாவது எக்ஸ்ரே வகை செயற்கைக் கோளாகும். இது பூமியின் கருந்துளை பற்றிய ஆய்வுகளை நடத்தும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், 2024 ம் ஆண்டு இஸ்ரோ பல்வேறு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் சரியாக அமையும் பட்சத்தில் 2025 ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைகோளை செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறைந்தது மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து மகளிர் குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. வீசாட் என பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோளை, கேரள அரசின் ‘மாணவர் செயற்கைக்கோள்’ திட்டத்தின் கீழ் வடிவமைத்துள்ளனர்.

தங்களுடைய அறிவியல் திறன்களையும் ரோபாட்டிக் செயல்பாடுகளையும் மெருகேற்ற உதவும் வகையில் இன்றைய நிகழ்வை நேரில் காண அனுமதித்ததன் வாயிலாக உதவி புரிந்தமைக்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இவர்கள் மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான அடல் டிங்கரிங் ஆய்வகம் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்