நிபா வைரஸால் கேரளாவில் 2 பேர் உயிரிழப்பு: உதவிக்கு மத்திய குழு விரைந்தது
நிபா வைரஸ் - காட்சி படம்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு "இயற்கைக்கு மாறான" இறப்புகள் பதிவாகியதை அடுத்து, நேற்று மாவட்ட அளவிலான சுகாதார எச்சரிக்கை வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு உறுதிப்படுத்தல் வந்துள்ளது.
"நிலைமையை ஆய்வு செய்யவும், நிபா வைரஸ் மேலாண்மையில் மாநில அரசுக்கு உதவவும் ஒரு மத்திய குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டது" என்று மாண்டவியா கூறினார்.
முதல் மரணம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியும், இரண்டாவது மரணம் திங்களன்றும் நடந்துள்ளது. கேரள அரசு கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகமூடிகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.
"கவலைப்பட ஒன்றுமில்லை. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவனமாக இருப்பதே நிலைமையைச் சமாளிப்பதற்கான வழியாகும். சுகாதாரத் துறை தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று முதல்வர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் வெடித்தது, பின்னர் 2021 ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவாகியது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, நிபா வைரஸ் பழம் தின்னும் வெளவால்களால் ஏற்படுகிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. சுவாச நோய்களுடன், இது காய்ச்சல், தசை வலி, தலைவலி, காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu