தீபாவளிப் பரிசாக 2 சிலிண்டர்கள் இலவசம்.. வாட் வரி 10 சதவீதம் குறைப்பு
பைல் படம்.
தீபாவளிப் பரிசாக 2 சிலிண்டர்கள் இலவசம் மற்றும் வாட் வரி 10 சதவீதம் குறைக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மக்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை (திரவ பெட்ரோலிய எரிவாயு-எல்பிஜி) வழங்குவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம் என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 38 லட்சம் பேர் பயனடைவார்கள். சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் (பிஎன்ஜி) ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி அல்லது வாட் வரியை 10 சதவீதம் குறைக்க குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது சிஎன்ஜியை ஒரு கிலோவுக்கு ரூ. 7 ஆகவும், நிலையான கன மீட்டருக்கு (எஸ்சிஎம்) பிஎன்ஜியை ரூ.6 ஆகவும் குறையும்.
சிஎன்ஜி மீதான வாட் வரியை குறைக்கும் நடவடிக்கையால் சுமார் 14 லட்சம் சிஎன்ஜி வாகன உரிமையாளர்களுக்கு பயனளிப்பதாக அமையும். விலை குறைப்பால் பாக்கெட் சுமை குறையும் என்பதால் சாமானியர்களுக்கு இது நிம்மதி பெருமூச்சி ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த இலவச இரண்டு சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர்களுக்கு பொதுமக்கள் சுமார் ரூ.1600 சேமிக்க முடியும். அதேபோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாட் வரி 10 சதவீதம் குறைப்பால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.60 முதல் 150 வரை மக்கள் சேமிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் விலை சுமார் 1050 ரூபாயாக உள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்ட பயனாளிகள் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் ரூ.200 தள்ளுபடி பெறுகிறார்கள்.
வாட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.1,650 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில கல்வி அமைச்சரும், குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி கூறுகையில், இது குடிமக்களுக்கான தீபாவளிப் பரிசு என்றும், இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதற்கு சுமார் ரூ.650 கோடி மானியம் பயன்படுத்தப்படும் என்றும், இந்த சிலிண்டர்களுக்கான பணம் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் ஜிது வகானி கூறினார்.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் புதிய திட்டங்கள், சலுகைகளை அறிவிக்க வசதியாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இதனிடையே ராகுல்காந்தியின் தேர்தல் வாக்குறுதிகளை LED திரையில் ஒளிபரப்பி குஜராத் முழுவதும் கொண்டு சேர்த்து வருகிறது காங்கிரஸ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu