கற்க வயது தடையல்ல: 97% பெற்று அசத்திய 108 வயது மூதாட்டி
எழுத்தறிவு திட்டத்தில் சாதனைப் படைத்த மூதாட்டி கமலக்கண்ணி.
இந்தியாவில் கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கையில் கேரள மாநிலம் எப்போதும் முதன்மையானதாகவே திகழ்ந்து வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவை பெற்றவர்களாகவே உள்ளனர். மேலும், முதியவர்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கேரள அரசால் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் , எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி, தொடர் கல்வி முயற்சியை கேரளா மாநில அரசு தொடங்கியது. தமிழகத்தில் அறிவொளி இயக்கம் செயல்பட்டது போலவே, கேரளா மாநிலத்தில் சம்பூர்னா சாஸ்திரா என்ற எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் வயது முதிர்ந்தவர்கள் அவர்களது பெயர்களை கையெழுத்தாக இடவேண்டும் என்பதன் அடிப்படையிலும் கல்வி கற்றுக் கொடுத்து வருகிறது.
இந்த திட்டத்தில் ஆர்வம் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இணைந்து கல்வி கற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து கேரளாவின் ஏலக்காய் தோட்ட வேலைக்கு சென்ற கமலக்கண்ணி என்ற 108 வயது மூதாட்டியும் கல்வி கற்று வருவது பலரையும் வியக்க வைத்து உள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை பூர்வீகமாக கொண்ட கமலக்கண்ணி என்ற மூதாட்டி இரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது குடும்ப வறுமை காரணமாக கேரளாவில் உள்ள வன்டன்மேடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறி ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
கேரளாவில் அதிகளவு ஏலக்காய் தோட்டம் உள்ளதால் தமிழகப் பகுதியில் இருந்து வேலை ஆட்கள் மொத்தமாக அங்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அந்த வகையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்பத்துடன் குடியேறி ஏலக்காய் தோட்ட வேலை செய்து வந்துள்ளார் கமலக்கண்ணி. தொடர்ந்து தோட்ட வேலை செய்து வந்துள்ளதால் கல்வியை பெற முடியாத நிலையில் அவர் இருந்துள்ளார்.
கடுமையாக உழைத்ததன் அடிப்படையில் தற்போது 108 வயது ஆனாலும் உடல் ரீதியாக ஆரோக்கியமான நிலையில் உள்ளார் கமலக்கண்ணி. நல்ல கேட்கும் திறனும் பார்வை திறனும் உள்ள 108 வயதான மூதாட்டியான கமலக்கண்ணி கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்க தொடங்கியது அந்தத் திட்டத்திற்கு முன் உதாரணமாக இருப்பதாகவும் அதற்காக மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழிலும் மலையாளத்திலும் எழுத கற்றுக் கொண்ட இவர், எழுத்தறிவு திட்டத்தால் நடத்தப்படும் தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண்களைப் பெற்று அசத்தி உள்ளார். முதுமையான வயதிலும் திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்கும் அவரது ஆர்வத்தை கண்டு கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.
முதுமை வயதிலும் கல்வியறிவு பெற ஆர்வமுடன் உள்ள கமலக்கண்ணிக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டுள்ளது. 108 வயதில் சாதனை படைத்த மூதாட்டிக்கு உலகம் முழுவதும் இருந்து தற்போது பாராட்டு குவியத் தொடங்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu