விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்
X

பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த சுப்கரண் சிங்.

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயி சுப்கரண் சிங் உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி சுப்கரண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள், ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் அணிவகுத்துள்ளனர். விவசாயிகளை டெல்லி நோக்கி முன்னேற விடாமல் ஹரியானா, பஞ்சாப் மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் தடுப்புகளை அகற்றி முன்னேற விவசாயிகள் முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மாநில எல்லை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 21ஆம் தேதியன்று, ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள கானௌரி பகுதியில், ரப்பர் குண்டுகளால் போலீசார் சுட்டதில் விவசாயி ஒருவர் பலியானதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்தனர். பதிண்டாவை சேர்ந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் பாதுகாப்பு படையினர் சுட்ட ரப்பர் குண்டு காயம் பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. சுப்கரன் சிங் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். விவசாயி உயிரிழப்பை அடுத்து இன்று கறுப்பு நாளாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாவும், சுப்கரன் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார். மேலும், சுப்கரண் பலிக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பஞ்சாப் அரசு துணை நிற்கும். விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதால் பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. இனி ஒரு சுப்கரணை இறக்க விடமாட்டேன் எனக் கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!