இறந்த பின்பும் 6 பேரை வாழ வைத்த ஆசிரியை

இறந்த பின்பும் 6 பேரை வாழ வைத்த ஆசிரியை
X

இறந்தும் தனது உடல் உறுப்புகளால் ஆசிரியை ஒருவர், 6 பேரை வாழ வைத்துள்ளார்.

துபாயிலுள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (41). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் அவரது சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். துபாயிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால விடுமுறைக்காக டெல்லிக்கு சையத் ரபாத் பர்வீன் சென்றுள்ளார். தொடர்ந்து அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. எனவே அதே பகுதியில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வரும் தனது மைத்துனரான டாக்டர் அன்வர் ஆலம் என்பவரிடம் சென்று உடல்நிலையை பரிசோதித்தார்.

பரிசோதனையில் மூளையில் உள்ள ரத்தநாளம் வீங்கி வெடிக்கும் நிலையில் உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை மோசமானது. வென்டிலேட்டரில் அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது.கோமா நிலைக்கு சென்ற அவரை கடந்த டிசம்பர் 24-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். பிறகு அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் அவரது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. 2 கண்நோயாளிகள் உள்ளிட்ட 6 பேர் அவரது உறுப்புகளால் மறுவாழ்வு அடைந்துள்ளனர். இறந்தும் 6 பேரை வாழ வைத்ததாக சமூக ஊடகங்களில் சையத் ரபாத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!