திருப்பதியில் 24-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது

திருப்பதியில் 24-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது
X

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 24-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை திருப்பதி ஏழுமலையானை வழிபட வெளியூர், வெளி மாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது என்று தேவஸ்தான அதிகாரி ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அதிகாரி ஜவகர் ரெட்டி பேட்டியில் கூறியதாவது :

வருகிற 25-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் துவாதசி விழா நடக்கிறது. 24-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது. வைகுண்ட ஏகாதசி அன்று உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார்கள். மறுநாள் துவாதசியையொட்டி கோவில் உள்ளே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

அதனை தொடர்ந்து முதல் முறையாக 10 நாட்களுக்கு பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். அரசு உயர் அதிகாரிகள் 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் அவர்களுடன் 6 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வருகிற 25-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி வரை தரிசன அனுமதி சீட்டு கிடையாது. ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

உள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 இடங்களில் 10 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அங்கு திருப்பதி, திருமலையைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அவர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதம் வழங்கப்படும். அன்று அதிகாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிவரை தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும். திருமலையில் பல்வேறு இடங்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளில் வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது" என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளில் வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என அறிவித்திருப்பது பாதயாத்திரையாக மலையேறி வரும் பக்தா்களை வருத்தமடைய வைத்துள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!