இந்தியா ஒரு வளமான நாகரீகம் கொண்ட நாடு - மேத்யூ ஹைடன் பெருமிதம்

இந்தியா ஒரு வளமான நாகரீகம் கொண்ட நாடு - மேத்யூ ஹைடன் பெருமிதம்
X

சர்வதேச ஊடகங்களில் கொரோனா நெருக்கடியில் இந்தியாவின் செயல்பாட்டை விமர்சிப்பது தனக்கு வேதனையளிப்பதாகவும், இந்தியாவைப் பற்றித் தெரியாமல் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு செய்திகள் வெளியிடுவதாகவும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆங்லத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது சர்வதேச அளவில் இந்தியாவில்தான் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய நிலை குறித்தும், அதை இந்தியா கையாளும் விதத்தை விமர்சித்தும் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூஹைடன், இந்தியாவுக்கு ஆதரவாக நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதன் தமிழ் சுருக்கம் இதோ

'அற்புதமான தேசமான இந்தியா, தற்போது நோய்த்தொற்றால் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சர்வதேச ஊடகங்கள், இந்தியாவை மிக எளிதாக ஒரு தராசில் வைக்கின்றன. கொரோனா இரண்டாவது அலையின் தீவிர பாதிப்புக்கு நடுவில், இதற்கு முன் யாரும் பார்த்திராத ஒரு நிலையில் இந்தியா இருக்கிறது.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நான் இந்தியா சென்று வந்து கொண்டிருக்கிறேன். அந்த தேசம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். குறிப்பாகத் தமிழகத்தில். அதை என் ஆன்மிக வீடாக நான் நினைக்கிறேன்.

எங்கு சென்றாலும் மக்கள் என்னிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்துள்ளனர். அதற்கு நான் என்றுமே கடன்பட்டிருப்பேன்.இந்தியாவுடன் எனக்கு நெருக்கமான பரிச்சயம் இருக்கிறது என்று என்னால் பெருமையாகச் சொல்ல முடியும்.

அதனால்தான் இந்தியா பிரச்சினையைப் பார்த்தும், இந்தியாவை, அதன் மக்களை, எண்ணற்ற சவால்களைப் பற்றி எதுவும் புரியாதவர்கள் ஊடகங்கள் மூலமாகத் தவறாகப் பேசும்போதும் என் இதயத்தில் ரத்தம் சொட்டுகிறது.

இந்த தருணத்தில் இந்தியாவைப் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர நினைத்தேன். இந்தியா பற்றித் தெரியாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பார்வையைக் கொடுக்கும்.

சில ஊடகங்களில் நான் பார்த்தது.இந்தியா அதற்குள் 16 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது. (ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிக ஜனத்தொகை). ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேருக்கு பரிசோதனைகளைச் செய்கிறது.

இந்தியாவைப் பற்றி ஒருவர் யோசிக்கும்போது ஒரு விஷயம்தான் மனதில் தோன்றும் அற்புத இந்தியா.

மனிதம் நிறைந்த மக்கள் நோய்த்தொற்றால் தடுமாறியுள்ளனர். பல்வேறு ஆன்மீக விழாக்களை, பிரம்மாண்ட திருமண வைபவங்களை, சாலையோட வியாபாரிகள், கால்நடைகள், பொதுமக்கள் நிறைந்த வீதிகளை, தற்போதைய நிலை மாற்றிவிட்டது. மாரிஸன் அரசாங்கத்தின் பயணக் கொள்கைகளைப் போல அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இந்தியா ஒரு வளமான நாகரீகம் கொண்ட நாடு. அதற்கு ஈடாக உலகில் வெகுசில நாகரிகங்களே உள்ளன. அந்த நாடு பிரச்சினையில் இருக்கும்போது அதைப் பற்றி நாம் எடை போடாமல், அதன் கலாச்சார, பிராந்திய, மொழி, மனித வளர்ச்சி உள்ளிட்ட மற்ற நுணுக்கமான விஷயங்களை நாம் பாராட்டுவதே நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவி என மேத்யூஹைடன் எழுதியுள்ளார்.

ஹைடனின் இந்தப் பதிவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்