வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை கட்டாயம்
வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று காலையில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழை காட்டிவிட்டு செல்லலாம்.
துபாய், சார்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மீண்டும் கட்டாயமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.
இதற்காக ரூ.1,200, ரூ.2,500 என 2 வீதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1,200 கட்டண பரிசோதனை செய்தால் கொரோனா முடிவு 6 மணியில் இருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ.2,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினா் கண்காணிப்பில் விமான நிலையத்தில் இருப்பர். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்த பயணி உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று இல்லை என முடிவு வந்தால் வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் 2வது அலை பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu