ஸ்பீட் போஸ்ட்டில் தாலி,ஜூம், பேஸ்புக்கில் திருமணங்கள் :கொரோனா படுத்திய பாடு

ஸ்பீட் போஸ்ட்டில் தாலி,ஜூம், பேஸ்புக்கில் திருமணங்கள் :கொரோனா படுத்திய பாடு
X

கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு மார்ச் இறுதியில் இருந்தே திருமணங்கள் வித்தியாசமான முறையில் தான் நடந்து வருகின்றன. அது குறித்து விளக்குகிறது இந்த பதிவு

வழக்கமாக திருமணங்கள் அவரவர் மத முறைப்படி சடங்குகள் வைத்து நடைபெறும். மேலும் திருமணத்திற்கு சில நாள்கள் முன்னரே திருமண வீடுகள் களை கட்டும். ஆனால் இவையெல்லாம் கொரோனா பரவலுக்கு முன்னர் தான். கொரோனாவிற்கு பின்னர் திருமணங்கள் எப்படி மாறியுள்ளன.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ், அஞ்சலி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அவர்களது திருமணப் பேச்சு ஆரம்பமாகி விட்டது. ஆனால் இடையில் கொரோனா பிரச்சினை தலையிட, கடந்த மே மாதம் ஜூம் செயலி மூலம் கோலாகலமாக நடந்து முடிந்தது இவர்களது திருமணம்.திருமணம் ஜூம் செயலி நடக்கப்போவதை உறுதி செய்ததும், அதற்கான ஐடி மற்றும் பாஸ்வர்ட்டையே அழகிய அழைப்பிதழாக டிசைன் செய்தனர் மணமக்கள். கேரளாவில் இருந்த மணமக்களின் பெற்றோர், தங்களால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற போதும், ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த 'மாங்கல்யத்தை' (தாலி) ஸ்பீட் போஸ்டில் மணமக்களுக்கு அனுப்பி வைத்தனர். பிறகென்ன உலகமெங்கிலும் உள்ள தங்களின் நண்பர்கள், உறவுகள் ஜூம்-இல் சூழ, அஞ்சலி கழுத்தில் தாலியைக் கட்டினார் விக்னேஷ். இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால் மணமக்களின் பெற்றோர்களால் இத்திருமணத்துக்கு வரமுடியவில்லை. அவர்களும் ஜூம் மூலமாகவே தங்கள் மகளையும், மருமகனையும் வாழ்த்தினார்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்திருந்தவர்கள், 22ம் தேதி தங்களது உறவினர்களுடன் கோயிலிலுக்கு வந்தனர். ஆனால், கோயிலினுள் திருமணம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கோயில் நிர்வாகம் அவர்களை வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொல்லி அறிவுறுத்தினர். இதனால் கோயில் அருகில் சாலையில் வைத்தே, உறவினர்கள் முன்னிலையில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றார். அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த உற்றார், உறவினர்கள் மலர் தூவி புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் சென்றனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள் பேட்ரிக் டெல்கடோவும், லாரன் ஜிமெனெஸ்சும். திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. கடந்த 2019ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2020ம் ஆண்டு தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர் பேட்ரிக்கும், லாரனும்.ஆனால் கொரோனா இவர்களது திட்டத்தை மாற்றியது. எனவே மூன்று முறை அவர்களது திருமணம் தள்ளிப் போனது. எனவே நவம்பர் மாத இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தனர். சரியாக திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்தபோது, மணப்பெண் லாரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் மீண்டும் திருமணம் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டது.

அதனை விரும்பாத மணமக்கள், இம்முறை எப்படியும் திருமணத்தை நடத்தியே தீருவது என உறுதியாக இருந்தனர். அதன்படி, மணமகள் தனது அறை ஜன்னல் அருகே இருக்க, மணமகன் கீழே நின்றுகொண்டு திருமண பந்தத்திற்கான உறுதிமொழியை ஏற்றனர். அப்போது இருவரும் நீளமான ஒரு ரிப்பனைக் கொண்டு தங்களது கைகளை இணைத்திருந்தனர். திருமணத்தின் போது இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்திருப்பது போன்ற உணர்வைப் பெற இப்படிச் செய்ததாக கூறியுள்ளனர்.

கொரோனாவினால் விழிப்புணர்வு திருமணங்களும் நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொறியாளர்களான கௌதம் குமார், மனோகரி இருவரின் திருமணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் திருமண அழைப்பிதழ் முதல் அனைத்திலும் அரசு விதிமுறைகளை திருமண வீட்டார் கடைபிடித்தனர்.மணமக்களை வாழ்த்தி விதவிதமான பேனர்கள் வைக்காமல் சமூக இடைவெளியின் அவசியத்தை வலியுறுத்தியும், முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேனர்கள் வைத்தனர். பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்க வேண்டிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் தெர்மா ஸ்கேனரையும் பயன்படுத்தினர்.

திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு தாம்பூல கவர்களில் கபசுர குடிநீர் பாக்கெட்டுகளும், முகக்கவசமும் வழங்கப்பட்டது. அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொண்டாட்டங்கள் இருந்தாலும், கொரோனாவை எளிதில் வென்றிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் நடந்து முடிந்து பாராட்டுகளைக் குவித்தது. இவை மிக சில உதாரணங்கள் தான். இது போல் ஏராளமான வித்தியாசமான திருமணங்களை கொரோனா கொடுத்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!