பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளூர்வாசிகள் தரிசனம்
ஓடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது. இன்று முதல் உள்ளூர்வாசிகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற புரி ஜகந்நாதர் கோயில், 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயில் நடை திறப்பு தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டிசம்பர் 23 ஆம் தேதி முதல் கோயிலைத் திறக்கவும், ஜனவரி 3 ஆம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து கடுமையான கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி புதன்கிழமை காலை 7 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதாக புரி மாவட்ட ஆட்சியர் பல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறும்போது, டிசம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரை கோயிலில் சேவையாற்றுபவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு டிசம்பர் 26 முதல் 31 ஆம் தேதி வரை புரி நகரவாசிகள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். புரி நகர மக்கள் வார்டு வாரியாக குறிப்பிட்ட நாள், நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகள் கழுவுவதற்காக கோயிலுக்கு வெளியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu