பிரகதி இலவசப் பெண் கல்வி திட்டத்தில் ரூ.50,000: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சார்பில் 'பிரகதி' திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயின்றுவரும் பொறியியல் மாணவிகளும் 'பிரகதி' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்குக்கூட பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு வழங்கிய வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமின்றி, ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறுபவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரகதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாணவியின் ஆதார் எண், கல்லூரிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை. ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பிரகதி உதவித்தொகைக்கு https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் இத்திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுதோறும் தலா ரூ.50 ஆயிரம், 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.50 ஆயிரம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu