/* */

முதலீட்டுத் திட்டங்கள்: சரியான திட்டத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?

பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் அளித்தாலும் அதில் சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது குறித்த தகவல்கள்

HIGHLIGHTS

முதலீட்டுத் திட்டங்கள்: சரியான திட்டத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
X

முதலீடு செய்வதற்கு நீங்கள் முடிவெடுக்கும்போதே இந்த முதலீட்டை எதற்காக ஆரம்பிக்கிறீர்கள் என்பது குறித்த தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்

சொத்து சேர்க்கவா, குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றுக்கா, உங்களது ஓய்வுக்கால செலவுகளுக்காகவா அல்லது தொடர் வருமானத்துக்காகவா என்பது போன்ற கேள்விக்கு தெளிவான விடை உங்களிடம் இருக்க வேண்டும்.

அதற்கு பிறகுதான், உங்கள் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.


வரிச் சலுகை வேண்டும் எனில், ஐந்து ஆண்டு வங்கி டெபாசிட், தபால் அலுவலக ஐந்து ஆண்டு டைம் டெபாசிட், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால்), தேசிய சேமிப்புச் சான்றிதழ், நேஷனல் பென்ஷன் திட்டம் (NPS), வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் (ELSS) போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

வரிச் சலுகை தேவை இல்லை எனில், வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட், கிஷான் விகாஸ் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

உங்களது முதலீடு, தொடர் வருமானத்துக்கான முதலீடு எனில், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்து வரலாம்.

இவை தவிர, முதலீட்டாளரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்துக்கேற்ப முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.


அடுத்து, உங்கள் முதலீட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் ஃபார்முலா உள்ளது. 100லிருந்து உங்கள் வயதை கழித்தால் கிடைக்கும் சதவீதத்தை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் போட வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 40 என்றால், 100ல் 40ஐ கழித்தால், கிடைக்கும் 60 சதவீத முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும் மீதித் தொகையைக் கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், கடன் பத்திரங்கள்) முதலீடு செய்ய வேண்டும்.

தங்கம் என்பது நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் தரக்கூடியது; மேலும், பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருக்கும் காலத்தில் லாபம் ஈட்டித் தரக் கூடியது. எனவே, ஒருவர் தன் முதலீட்டுக் கலவையில் டிஜிட்டல் கோல்டு (ஆர்.பி.ஐ-யின் தங்கப் பத்திரம், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்) திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் தங்க நகைகளை இந்த கணக்கில் சேர்க்கக் கூடாது.

ஓய்வுக்கால முதலீடுகள்

பெரும்பாலானோர் ஓய்வுக் காலத்துக்கென தனியே முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு. பணி ஓய்வுக்காலத்துக்கென சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடன்ட் ஃபண்ட் (EPF) தொகையையும் இடையிடையே வேறு செலவுகளுக்கு எடுத்து விடுவதால், பணிஓய்வு பெறும்போது, இ.பி.எஃப் கணக்கில் குறைவான தொகையே இருக்கும். இதைக் கொண்டு ஓய்வுக்கால செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இ.பி.எஃப் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை நிதி ஆண்டில் வருமான வரிச் சலுகை இருக்கிறது. தற்போதைய நிலையில், இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கப் படுகிறது.

சமீபத்தில்ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இ.பி.எஃப்-க்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம். வட்டி வருமானத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை வேறு இருக்கிறது. நிதி ஆண்டில் ஒருவர் செய்யும் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட இ.பி.எஃப் தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

இந்த அளவுக்கு அதிகமான தொகையை இ.பி.எஃப்பில் முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவான பேரே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தப் பணத்தைக் கடைசி வரைக்கும் எடுக்காமல் இருந்தால் ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கூட இந்தக் கணக்கில் சேர வாய்ப்புள்ளது.


அடுத்து, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த முதலீட்டுக்கும் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. ஆனால், வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை இல்லை. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ஓய்வுக் காலத்தில் அதிக தொகை தேவைப்படும் என நினைத்தால், பிபிஃப்பில் பணம் சேர்த்து வரலாம். இதன் லாக்-இன் காலம் 15 ஆண்டுகள்.


அடுத்து, நேஷனல் பென்சன் சிஸ்டம் (NPS). இது, ஓய்வுக் காலத்துக்கான சிறந்த முதலீடாக இருக்கிறது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.50,000 வரைக்கும் நிதி ஆண்டில் 80சி பிரிவைத் தாண்டி வரிச்சலுகை இருக்கிறது. இதில் பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என முதலீட்டு விருப்பங்கள் அல்லது வயதுக்கு ஏற்ற முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.

இந்த முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைத்து வருகிறது. 60 வயதுக்குப் பிறகு, மொத்தத் தொகையில் 60% தொகையை வரி எதுவும் இல்லாமல் எடுத்துக் கொள்ள முடியும். மீதி 40% தொகை, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்களில் முதலீடு செய்யப்பட்டு பென்ஷனாக வழங்கப்படும்.


மேலும் நிதி ஆலோசகரின் உதவியோடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (SIP) முதலீடு செய்து வரலாம். அப்படி முதலீடு செய்து சேர்த்த தொகையை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் பென்ஷன் போல் பெற்றுவரலாம். ஓய்வுக் காலத்துக்காக மேற்கண்ட ஏதாவது ஒரு திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்து வர வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. மேற்கண்ட திட்டங்கள் அனைத்திலும் கலந்துகூட முதலீடு செய்து வரலாம். இப்படிச் செய்யும்போது உங்கள் முதலீட்டு ரிஸ்க் பரவலாக்கப்படும்

Updated On: 23 May 2022 5:11 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 2. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 3. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 4. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 5. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 7. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 8. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
 9. லைஃப்ஸ்டைல்
  தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
 10. லைஃப்ஸ்டைல்
  உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...