/* */

டெர்ம் பிளான் எடுத்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா?

டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் எந்த வகை இறப்புக்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், எந்த வகை இறப்புக்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பதை பார்ப்போம்

HIGHLIGHTS

டெர்ம் பிளான் எடுத்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா?
X

நம்மில் பலர் டெர்ம் பிளானை எடுத்து விட்டால், பாலிசிதாரர் காலமானால் குடும்பத்துக்குக் காப்பீட்டுத் தொகை இழப்பீடாகக் கிடைக்கும் என நினைக்கிறோம். ஆனால் எந்த வகை இறப்புகளுக்கு கிடைக்கும், எந்த வகை இறப்புகளுக்கு கிடைக்காது என்பது குறித்த தகவல்கள் உங்களுக்காக

எந்தெந்த இறப்புகளுக்கு இழப்பீடு உண்டு?

  • டெர்ம் பாலிசியில் இயற்கை மரணம் அல்லது உடல்நலக் குறைவால் ஏற்படும் மரணம் ஆகியவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.
  • தீவிர நோயால் இறப்பவர்களுக்கும் டெர்ம் பிளானில் இழப்பீடு உண்டு. மேலும், விபத்து மூலம் நடக்கும் மரணத்துக்கும் இழப்பீடு உண்டு.
  • டெர்ம் பிளானுடன் கூடுதலாக விபத்துக் காப்பீட்டு துணைப் பாலிசி (Rider) எடுத்திருக்கும் பட்சத்தில் கூடுதல் இழப்பீடு கிடைக்கும்.
  • தூக்கத்திலேயே இறந்துபோதல், மாரடைப்பால் ஏற்படும் மரணம், பணியிடத்தில் ஏற்படும் விபத்து மூலமான மரணம், கட்டடத்திலிருந்து தவறி விழுந்து மரணம், குளியல் அறை அல்லது வீட்டுக்குள் தவறி விழுந்து இறப்பது, நீர்நிலைகளில் மூழ்கி இறப்பது, மின்சாரம் தாக்கி இறப்பது போன்றவற்றுக்கு டெர்ம் பிளானில் இழப்பீடு கிடைக்கும்.

எந்த வகை இறப்புகளுக்கு இழப்பீடு கிடையாது?

தற்கொலை செய்து கொண்டால்

பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால், நாமினிக்கு இழப்பீடு கிடையாது. சில காப்பீட்டு நிறுவனங்கள், கட்டிய பிரீமியத்தில் குறிப்பிட்ட சதவிகித்தை வழங்குகின்றன. இந்த விவரங்கள் பாலிசி குறித்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். பாலிசி எடுத்திருப்பவர் இரண்டாவது ஆண்டுக்குப் பிறகு, தற்கொலை செய்து கொள்ளும்பட்சத்தில் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன.

பாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால்?

பாலிசிதாரர் குற்றவாளியாக இருந்து, ஏதோ தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டால் இழப்பீடு கிடைக்காது. பாலிசிதாரர் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபடும்போது மரணம் அடைந்தாலும், அவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்காது.

ஆனால், பாலிசிதாருக்கு குற்றப் பின்னணி இருந்தாலும், அவர் இயற்கையின் பாதிப்புகளால் இறக்கும்பட்சத்தில் நாமினிக்கு இழப்பீடு கிடைக்கும்.

போதை காரணமாக மரணம்

குடிபோதை அல்லது போதை மருந்து பயன்படுத்திய நிலையில், விபத்தில் மரணம் அடைந்தால் காப்பீட்டு கிடைக்காது. மேலும், பாலிசி எடுக்கும்போது மதுப்பழக்கம் இருந்து அதை மறைத்து விட்டு, தற்போது மது பாதிப்பால் மரணம் அடைந்தாலும் இழப்பீடு கிடைக்காது.

புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் மரணம்

பாலிசிதாரர் புகைபிடிப்பவராக இருந்தால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, படிவத்தில் அதனை குறிப்பிடத் தவறாதீர்கள். புகை பிடிப்பவர்களுக்கு அதிக உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கூடுதல் பிரீமியம் வசூலிக்கும். புகை பிடிப்பதைக் குறிப்பிடாமல் இருந்து, அதனால் மரணம் அடையும் பட்சத்தில் இழப்பீடு கிடைக்காது.

ஏற்கெனவே இருக்கும் நோய் காரணமாக மரணம்

டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பாலிசி எடுக்கும்போது, ஏற்கெனவே இருக்கும் நோயால் ஏற்படும் மரணத்துக்கு இழப்பீடு கிடையாது. தானாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் காரணமான மரணம், எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களால் மரணம், அளவுக்கதிகமான போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றுக்கும் டெர்ம் பாலிசியில் இழப்பீடு கிடையாது.

அபாயகரமான செயல்களில் ஈடுபடுவதன் மூலமான மரணம்

திடீரென சாகச அல்லது அபாயகரமான செயலில் (Adventure or Hazardous activity) ஈடுபட்டு, மரணம் அடைந்தால், டெர்ம் பாலிசியில் இழப்பீடு கிடையாது. அதே நேரத்தில், கார் மற்றும் பைக் பந்தயம், ஸ்கைடைவிங், பாராகிளைடிங், பாராசூட்டிங் மற்றும் மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் பாலிசிதாரர் பங்கேற்பவராக இருந்தால், பாலிசி எடுக்கும் போதே தெரிவிக்க வேண்டும். இதனால், கூடுதல் பிரீமியம் நிர்ணயிக்கப்படும். இந்த விவரங்களைச் சொல்லத் தவறினால், உண்மையை மறைந்ததாகக் கருதப்பட்டு, இழப்பீடு மறுக்கப்படும்.

பிரசவத்தின் போது மரணம்

பிரசவத்தின்போது ஏற்படும் மரணத்துக்கு டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இழப்பீடு கிடையாது. நிலநடுக்கம், பெரும் புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மரணங்களும் டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் கிடையாது.

நாமினியால் பாலிசிதாரர் கொலை

பல இடங்களில் பணத்துக்காக பாலிசிதாரரை நாமினியாக நியமிக்கப்பட்டவரே கொலை செய்வது நடந்திருக்கிறது. பாலிசிதாரர் நாமினியால் கொலை செய்யப்பட்டு இறந்தால், காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரிக்கும்.

பாலிசி எடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

காப்பீடு என்பது நமது குடும்பத்தின் பாதுகாப்பு. எனவே, நாம் தேர்ந்தேடுக்கும் காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாடு, முகவரின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கவனிப்பது முக்கியம். பாலிசி முன்மொழிவுப் படிவத்தில் வெளிப்படைத்தன்மையுடன் சரியான தகவல்களைத் தெரிவிப்பது கட்டாயம். சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதோ, அதைக் கவனத்தில் கொள்ளாமலே கையொப்பமிடுதலோ காப்பீட்டின் நோக்கத்தை நிறைவேற்றாது.

குறிப்பாக, புகைபிடித்தல், மது அருந்துதல், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை உடல் குறைபாடுகள் போன்றவற்றை முறைப்படி தெரியப்படுத்தினால், அதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பரிசீலித்து ஏற்றுக்கொண்டால், பின்னர் எந்த நிறுவனமும் இழப்பீடு தர மறுக்காது. இவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து சற்றுக் கவனம் செலுத்தினால், இழப்பீடானது குடும்பத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் சரியாகப் போய் சேரும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நோக்கம் இழப்பீடு தர மறுப்பது இல்லை என்னும் நிலையில், உடல்நிலை குறித்து அளிக்கும் தகவல்கள் வெளிப்படையாக இருப்பது நல்லது.

தற்காலத்தில் வாழ்வியல் குறைபாடுகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் நலம் மிக நல்ல நிலையில் இருக்கும்போது காப்பீடு செய்துகொள்வது உத்தமம். நல்ல உடல்நலம் கொண்டவருக்கு ஏற்கெனவே முடிவு செய்த பிரீமியமும், சற்றே குறைபாடுகள் இருப்பின் கூடுதல் பிரீமியத்திலும் காப்பீடு கிடைக்கும்.

Updated On: 24 May 2022 5:01 AM GMT

Related News