சுய தொழில் தொடங்க முதலீடு தேவையா? இதைப்படிங்க..
வேலைவாய்ப்பற்றோர் சுயதொழில் துவங்க தேவையான முதலீடு இன்றி தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர். இதனை தவிர்த்து சுயதொழில் தொடங்குவதற்கான முதலீட்டை பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டம் கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றோரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்குதல். வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்வதன் மூலம் இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்து நிறுத்துகிறது.
உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் ரூ.25 லட்சத்திற்கு திட்ட மதிப்பு இருக்க வேண்டும். சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பு இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். திட்ட மானியமாக கிராமப்புறங்களில் தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதமும், நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதமும் மானியமாக பெறலாம்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோர் கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் வரை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் அதிகபட்சமாக 25 சதவீதம் மானியமாக பெறலாம். இந்த திட்டத்திற்கு 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமான வரம்பு ஏதும் கிடையாது.
இந்த நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.
இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தேவையான முக்கிய ஆவணங்கள்:
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
- தொழிலின் திட்ட அறிக்கை.
- கல்வித் தகுதி சான்றிதழ்.
- கல்வித் தகுதி சான்றிதழ் இல்லையெனில் வயது ஆதார சான்றிதழ்.
- குடும்ப அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு ஆதாரம்.
- தொழில் செய்யவிருக்கும் இடத்திற்கான நில பத்திர நகல் / வாடகை ஒப்பந்த பத்திரம் / குத்தகை ஒப்பந்த பத்திரம்.
- கட்டிடம் கட்டுவதற்கு கடன் தேவைப்படின் மதிப்பீட்டுடன் கூடிய கட்டிட வரைபடம்.
- இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் விலைப்புள்ளி
- விண்ணப்பதாரர் சிறப்பு பிரிவினர் என கோரும் பட்சத்தில் சாதிச் சான்றிதழ்.
- தொழில் சம்மந்தமான பயிற்சிகள் முடித்திருப்பீன் அதற்கான சான்றிதழ் .
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu