பி.எப்.கணக்கில் புதிய வங்கி கணக்கை சேர்க்க இதை படித்தால் தெரிந்து கொள்ளலாம்

பி.எப்.கணக்கில் புதிய வங்கி கணக்கை சேர்க்க  இதை படித்தால் தெரிந்து கொள்ளலாம்
கோப்பு படம்.
உங்களது பி.எப்.கணக்கில் புதிய வங்கி கணக்கை ஆன்லைன் மூலம் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி என்ற பி.எப்.கணக்கு உண்டு. மாதம், மாதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பணம் அவர்களுடைய பி.எப். கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ஊழியர்களுக்கு தனியாக கணக்கு எண் ஒன்றும் பி.எப். இயக்குனரகம் சார்பில் வழங்கப்படும். பி.எப். கணக்கில் செலுத்தப்படும் தொகை ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றதும் அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படும். இடையில் ஊழியர்கள் வேறு நிறுவனம் மாறினாலும் பி.எப். கணக்கு எண்ணை பயன்படுத்தி தொடர்ந்து அதில் பணம் செலுத்தலாம். பி.எப். கணக்கில் இருந்து வீடுகட்ட, திருமண செலவுக்கு கடன்பெறலாம்.

பி.எப். கணக்கு தொடர்பான விவரங்களை உமாங்(umang) ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பி.எப். தொடர்பான சேவையை பெற்றுக்கொள்ளலாம். பி.எப். பயன்களை பிரச்சனை இல்லாமல் பெற வேண்டும் என்றால் அந்த கணக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். முக்கியமாக ஊழியர்கள் இந்த பி.எப். கணக்கில் வாரிசு நியமனம் அதாவது நாமினியை முறைப்படி பதிவு செய்து கொள்ளவேண்டும். இதை செய்ய தவறியவர்கள் உடனடியாக வாரிசு நியமனத்தை செய்து கொள்ள வேண்டும்.

பி.எப். கணக்கில் ஊழியர்கள் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வங்கி கணக்கை இணைத்து இருப்பார்கள். பி.எப். தொகையை பெறுவது, அதில் கடன்பெறுவது என்று அனைத்து பண பரிவர்தனைகளும் இந்த வங்கி கணக்கில் தான் நடைபெறும். ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த வங்கி கணக்கு முடங்கி விட்டாலோ அல்லது புதிய வங்கியில் கணக்கு தொடங்கி இருந்தாலோ அதை பி.எப். கணக்குடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். அவ்வாறு புதிய வங்கி கணக்கை பி.எப். கணக்கோடு இணைக்க ஆன்லைன் வசதி உள்ளது. அதனால் பி.எப். வாடிக்கையாளர்கள் கவலைப்படாமல் ஆன்லைன் மூலமாகவே புதிய வங்கி கணக்கை இணைத்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் முறையில் எவ்வாறு இணைக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்து கொள்ள வேண்டும். அடுத்து 'மேனேஜ்' டேபை கிளிக் செய்து அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'KYC'-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து அதில் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி. குறியீட்டை சேர்த்து 'சேவ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் பதிவு செய்த இந்த விவரங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளபட்டதும் அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் (அப்ரூவ்ட் KYC செஷன்) தோன்றும். இந்த நடைமுறை முடிந்து விட்டாலே பி.எப். கணக்கில் உங்களது புதிய வங்கி கணக்கு எண் விவரங்கள் சேர்க்கப்பட்டு விடும். இனிமேல் பி.எப். தொடர்பான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த புதிய வங்கி கணக்கின் வழியாகத்தான் நடைபெறும்.

Tags

Next Story