ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!
ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ''OTTல் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் M.S.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி'' என்றார்.
நடிகர் வைபவ் கூறுகையில், '' 'லாக்கப்', 'டானா', 'கப்பல்' போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ZEE5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதாமோகன், வாணிபோஜன், கருணாகரன், M.S.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில், '' 'ZEE5ன் 'லாக்கப்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். ராதாமோகன் சார், M.S.பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.''
நடிகர் M.S.பாஸ்கர் கூறுகையில், ''இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு 'அழகிய தீயே' படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து 'மொழி', 'பிருந்தாவனம்', 'காற்றின் மொழி' இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்த படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார். மத்த படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.
நடிகர் கருணாகரன் கூறுகையில், ''நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. 'உப்பு கருவாடு' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், M.S.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.
-மைக்கேல்ராஜ்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu