பேண்டஸி படமான 'ஆலம்பனா' படப்பிடிப்பு நிறைவு
குழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். தமிழில் அப்படியான படங்கள் மிகவும் குறைவு. தற்போது தமிழில் அப்படியான ஒரு படமொன்று தயாராகியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
'ஆலம்பனா' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம் பேண்டஸி கான்செப்ட் பாணியில் தயாராகியுள்ளது. அந்த கான்செப்ட் பின்னணியில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தயாராகியுள்ள படம் இது என்று சொல்லலாம். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர். பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரத்துடன் உருவாக்கியுள்ளனர். பெரும் பொருட்செலவிலான படம் என்பதால் நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
துள்ளலான இசையை வழங்கும் ஹிப் ஹா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அவருடைய இசை கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறது படக்குழு. ஏனென்றால், பாடல்களே கதைக்குத் தகுந்தவாறு அற்புதமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் என்கிறார் இயக்குநர் பாரி கே.விஜய். மைசூர் அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என பம்பரமாய் சுழன்றும், அதே வேளையில் நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரத்தினசாமி. எடிட்டரான ஷான் லோகேஷ் பணிபுரிந்து வருகிறார்.
பிரம்மாண்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிந்த பீட்டர் ஹெய்ன், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரத்தியேகமாக வடிவமைத்து வித்தியாசமாகக் கையாண்டுள்ளார். அது ஏன் என்பது படமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் என்கிறது படக்குழு. பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் அரங்குகள் அனைத்துமே யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார் கோபி ஆனந்த். கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் நனைய வைத்து குழந்தைகளை குஷிப்படுத்த 'ஆலம்பனா' தயாராகி வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu