'மாஸ்டர்' தயாரிப்பாளர்கள் ஜஸ்ட் பாஸா?

மாஸ்டர் தயாரிப்பாளர்கள் ஜஸ்ட் பாஸா?
X
‘மாஸ்டர்’ என்ற படத்தைத் தாங்கள்தான் தயாரித்தோம் என்ற பெருமையும், மகிழ்ச்சியும் மட்டுமே தயாரிப்பாளர்களும் கிடைத்திருக்கிறது -மைக்கேல்ராஜ் .

'மாஸ்டர்' திரைப்படம் நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வசூலைக் கொடுத்த படம் என்று ஒரு பக்கம் பலரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவும், இணை தயாரிப்பாளரான லலித்குமாரும் ஜஸ்ட் பாஸாக மட்டுமே தப்பித்திருக்கிறார்கள் என்கிறார்கள் இவர்களது நெருங்கிய வட்டாரங்கள்.

'மாஸ்டர்' படத்திற்கான தயாரிப்புச் செலவுகளை செய்து படத்தைத் தயாரித்திருந்தது தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் என்றாலும் இந்தப் படத்தின் ஒட்டு மொத்த தயாரிப்பு நிர்வாகத்தையும், வெளியீட்டு உரிமையையும் பெற்றிருந்தவர் தயாரிப்பாளர் லலித்குமார்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த அதே திட்டமிடலில் 'மாஸ்டர்' படம் வெளியாகியிருந்தால், இந்தத் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை இந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கும். ஆனால் உலகம் தழுவிய கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்துதான் இத்திரைப்படம் இந்தாண்டு ஜனவரி 13-ம் தேதியன்று திரைக்கு வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டின் தீபாவளியன்றே திரைக்குக் கொண்டு வர எத்தனித்து அது முடியாமல் போனபோது படத்தை வாங்கியிருந்த


விநியோகஸ்தர்களில் பலரும் தங்களது வெளியீ்ட்டு உரிமத்தைத் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு கொடுத்த பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அப்போது பெரும் பதட்டமடைந்த லலித்குமார் இந்தச் சிக்கலினால் தான் பெரிதும் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவிடம் தனது நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இருவரும் இணைந்து படத்தின் ஹீரோ விஜய்யிடம் இதைச் சொல்ல.. "பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டு அந்தப் பகுதி உரிமத்தை நீங்களே வாங்கிக்குங்க…" என்ற விஜய்யின் அறிவுரையினால் கோடிக்கணக்கான பணத்தினை அந்த 7 மாதங்களுக்கான வட்டியுடன் திருப்பிக் கொடுத்தார் லலித்குமார்.

இந்த வட்டித் தொகையே பல கோடிகளைத் தாண்டியதால் இது லலித்குமாருக்கு முதல் கட்ட நஷ்டத்தைக் கொடுத்துவிட்டது.

இதன் பின்பு எந்தெந்த ஏரியாக்களின் உரிமம் தன்னிடம் உள்ளதோ அந்தந்த இடங்களிலெல்லாம் தானே தியேட்டர்களிடத்தில் முன் பணத்தை வாங்கிக் கொண்டு படத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் லலித்குமார். படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய எதிர்பார்ப்பும், தொடர்ச்சியாக 50% இருக்கைகளும் நிரம்பி வழிந்ததால் படம் தப்பிப் பிழைத்தது, லலித்குமாரும் தப்பித்தார்.

தான் படத்தை வாங்கி, விற்ற வகையில் தான் செலவிட்ட பணம் தனக்குத் திரும்பக் கிடைக்கும் என்று அவர் நினைத்திருந்தாலும் கடைசி காலக்கட்டத்தில் செலவழித்த விளம்பரத் தொகையும், விநியோகஸ்தர்களின் தொகையை திருப்பிக் கொடுத்தபோது ஏற்பட்ட வட்டித் தொகையினாலும் தான் முதலீடு செய்த தொகை முழுமையாக வராமல் லலித்குமாரின் கையைக் கடித்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான் அமேஸான் நிறுவனம் உடனடியாக 'மாஸ்டர்' படத்தை வெளியிட அனுமதித்தால் கூடுதலாக 16 கோடி ரூபாய் தருவதாகச் சொல்ல.. தனது பணத் தேவைக்காக விநியோகஸ்தர்களிடத்திலும், திரையரங்கு உரிமையாளர்களிடத்திலும் ஒரு வார்த்தைகூட கேட்காமல் படத்தை வெளியிட NOC-யை அமேஸானுக்குக் கொடுத்துவிட்டார் லலித்குமார்.

இப்போதுதான் கூட்டம் வந்து சேர்ந்து கொண்டேயிருக்க தொடர்ந்து காசை அள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இதனால் கடும் கோபமாகி பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர்.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் லலித்குமாரும் கடைசி நேரத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 'மாஸ்டர்' படம் இப்படி 16-வது நாளிலேயே ஓடிடிக்குச் சென்றிருப்பதால் தங்களுக்கு வர வேண்டிய வசூல் நிச்சயமாக குறையும் என்பதால் அதற்கு தயாரிப்பாளர் லலித்குமார்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று உறுதியான குரலில் கோரியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும். பல மணி நேரம் நடந்த பஞ்சாயத்திற்குப் பின்பு இரு தரப்பிலும் நஷ்ட ஈடு விவகாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.

இதன்படி 'மாஸ்டர்' படத்தின் இரண்டாவது வார வசூலில் ஒப்பந்தத்தைவிட பத்து சதவிகிதப் பணத்தைக் குறைவாக வாங்கிக் கொள்வதாகவும், மூன்றாவது வார வசூலில் இருந்து தனக்கு எந்தப் பங்கும் வேண்டாம் எனவும் லலித்குமார் சொல்லிவிட்டாராம்.

அமேஸான் நிறுவனம் 'மாஸ்டர்' படத்தை முன்கூட்டியே ஒளிபரப்பு செய்வதற்காக ஏற்கெனவே கொடுத்திருந்த உரிமத் தொகை போக.. கூடுதலாக 15.5 கோடியை லலித்குமாருக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இப்போது தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் விதித்திருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையும், இந்தத் தொகையும் கிட்டத்தட்ட ஒன்றுதானாம். ஆக, மொத்தத்தில் அந்தப் பக்கம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றெண்ணி செய்த செயல், கடைசியில் கூடுதல் செலவினதைத்தான் லலித்குமாருக்குக் கொடுத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் 'மாஸ்டர்' படத்தின் மூலமாகக் கிடைத்த மொத்த வசூலில் வரி நீக்கிய வசூல்.. விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகை.. பெற்ற தொகை… இதையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் 'மாஸ்டர்' படம் நஷ்டமும் இல்லை.. அதேபோல் லாபமும் இல்லை என்ற நிலையில்தான் இருக்கிறதாம்.

இந்தக் கணக்கு, வழக்குகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த நடிகர் விஜய், இதற்காக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கும், லலித்குமாருக்கும் தலா 10 கோடி ரூபாயை கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் கடைசி கட்டமாக கையைக் கடித்த விஷயத்தில் இருந்தும் அந்த இரண்டு தயாரிப்பாளர்களும் தப்பிவிட்டார்கள்.

விஜய் நடித்த 'மாஸ்டர்' என்ற படத்தைத் தாங்கள்தான் தயாரித்தோம் என்ற பெருமையும், மகிழ்ச்சியும் மட்டுமே இப்போது அவர்கள் இருவருக்கும் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மையாம்.

- மைக்கேல்ராஜ்

Next Story