மாணவப் பருவத்தில் யோகா பிற்கால வாழ்க்கைக்கு நல்லது -சென்னைப் பல்கலை துணைவேந்தர் அறிவுரை

மாணவப் பருவத்தில் யோகா பிற்கால வாழ்க்கைக்கு நல்லது -சென்னைப் பல்கலை துணைவேந்தர் அறிவுரை
X
மாணவப் பருவத்திலேயே யோகா கற்றுக் கொள்வது பிற்கால வாழ்க்கைக்கு நல்லது என மாணவர்களிடம் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி அறிவுறுத்தினார்.

யோகா என்பது உடற்பயிற்சி மட்டும் அல்ல. அது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கிறது. யோகப் பயிற்சியானது நமது உடலில் பல்வேறு ஹார்மோன்கள் தேவையான அளவு சுரக்க உதவுகின்றன. உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. சித்தர்கள் வளர்த்தெடுத்த யோகாவை மக்களிடம் பரவலாக்க நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.கௌரி கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக நாட்டு நலப் பணித் திட்டமும் இணைந்து இன்று (13.5.2022) பல்கலைக் கழக வளாகத்தில் நடத்திய சர்வதேச யோகா தினத்துக்கான முன்னோட்ட பயிலரஙகைத் துவக்கி வைத்து பேசியபோது டாக்டர் கௌரி இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆயுஷ் அமைச்சகம் ஒய்-பிரேக் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகத்தில் பணிபுரிவோர் ஐந்து நிமிடம் இடைவெளி எடுத்துக் கொண்டு இந்த செயலி மூலம் யோகா செய்யலாம். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். யோகாவை வாழ்க்கை முறையாக கடைபிடிப்பேன் என்று இணையதளத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சான்றிதழ் பெறலாம். இதுவரை 77 லட்சம் பேர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு உள்ளனர். இங்கு பங்கேற்று உள்ள மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

துவக்க நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித் திட்ட பிராந்திய இயக்குநர் டாக்டர் சி.சாமுவேல் செல்லையா, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.மணவாளன், சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வனிதா அகர்வால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து யோகா செயல் விளக்கமும் மாணவர்களுக்கு யோகா பயிற்சியும் நடைபெற்றது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் ஆர். மீனா மற்றும் ஆலோசகர் டாக்டர் எஸ்.குமார் பொதுவான யோகாசனங்களை கற்றுத் தந்தனர். சிறப்பாக யோகாசனங்களை செய்து காட்டிய மாணவர்களுக்கு மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் பரிசுகள் வழங்கி நிறைவுரை ஆற்றினார்.

முன்னதாக புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் டாக்டர் பி.மாதவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200 நாட்டு நலப் பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா