முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு க்யூட் தேர்வு: யுஜிசி அறிவிப்பு
42 மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்துள்ளது .
பொது நுழைவு வாயிலாக முதுகலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் தேசிய தேர்வு முகமையின் (NTA) https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் கிடைக்கும் என்று யுஜிசி தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார் .
ஜூன் 18 அன்று விண்ணப்பிக்க கடைசி தினம் என்றும், ஜூலை கடைசி வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று பேராசிரியர் குமார் ட்விட்டரில் அறிவித்தார்.
முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும். விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பது இன்று NTA இணையதளத்தில் தொடங்கும். பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் கிடைக்கும். முதுநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் அனுப்புவது 19.05.2022 முதல் தொடங்கும். அதற்கான இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
42 மத்தியப் பல்கலைக்கழகங்கள் 2022-23 ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கையை பொது நுழைவு வாயிலாக மேற்கொள்ளும். தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும்
44 மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்பில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பதிவுச் செயல்முறையும் தற்போது நடைபெற்று வருகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களைத் தவிர, சில தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இந்தத் தேர்வை ஏற்றுக்கொண்டன.
இதற்கிடையில், இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 22 அன்று கடைசி நாளாகும். இருப்பினும், CUET-UG தேர்வுக்கான தேதிகளை யுஜிசி இன்னும் அறிவிக்கவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu