பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
X
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை பட்டியல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

இதனிடையே கணிதத்தில் 690 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் இந்த ஆண்டு என்ஜினியரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

முதலாம் ஆண்டு வகுப்புகளில் உள்ள காலியிடங்களில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். அவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும். அதேபோல், நேரடியாக 2-ம் ஆண்டில் சேரும் மாணவர்களும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சேர வேண்டும்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!