12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை.
தேர்வு முடிந்ததும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.
முன்னதாக மே 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8-ம் தேதி(இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் போன்றவற்றை தீர்க்கும் வகையில் இந்த உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu