‘பிடிச்சதை படிங்க, படிச்சதை எழுதுங்க, ‘ஈஸி’ யா பாஸ் ஆயிடுவீங்க....’ - பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளே... உங்களுக்குத்தான் இந்த ‘டிப்ஸ்’

‘பிடிச்சதை படிங்க, படிச்சதை எழுதுங்க, ‘ஈஸி’ யா பாஸ் ஆயிடுவீங்க....’ - பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளே... உங்களுக்குத்தான் இந்த ‘டிப்ஸ்’
X

பொதுத்தேர்வை கண்டு பயப்படத் தேவையில்லை. படித்ததை எழுதினாலே, நீங்கள் பாஸ்தான் (கோப்பு படம்)

பொதுத்தேர்வு என்பது, இத்தனை ஆண்டுகளாக எழுதிய முழு ஆண்டுத்தேர்வை போன்ற ஒரு சாதாரண தேர்வுதான். அதே பாடம், அதே தேர்வறை, அதே வினாத்தாள், அதே மதிப்பெண், அதே ஆசிரியர்கள்தான்... இதில் அச்சப்பட ஒன்றுமே இல்லை என்பதை, மாணவர்கள் தெளிவாக புரிந்துகொண்டால், வெற்றி மிக மிக எளிதாகி விடும்.

தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. எந்த மாதிரி படிக்க வேண்டும்‌ என்பதற்கும்‌ எப்படிப்‌ படிக்க வேண்டும்‌ என்பதற்கும் வரையறை எதுவும்‌ கிடையாது.

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை மறுநாள் 13-ம்தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 14-ம் தேதி முதல் பிளஸ்-1 தேர்வுகளும், அடுத்த மாதம் 6-ம்தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வும் தொடங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அறை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தேர்வு செய்து, பணி ஒதுக்கீடு, செய்யப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் எழுதுகிறார்கள். பிளஸ்-2 தேர்வுக்காக 3,225 மையங்களும், பிளஸ்-1 தேர்வுக்காக 3,224 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


(கோப்பு படம்)

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி கல்வியாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதைப் படிக்க வேண்டும் என்ற வரம்பு நமக்கு தெரியவரும். ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் படிப்பது, எத்தனை மணிநேரம் படிப்பது என்று முடிவு செய்வது இன்னும் பலனளிக்கும்.‘ 24 மணிநேரமும் படிக்கிறேன்’ என்ற பெயரில் உடல்நலனைக் கெடுத்துக் கொள்ள கூடாது. அப்படி இல்லாமல் படிப்பதற்கான நேரம் போக, சிறிது நேரம் நமக்குப் பிடித்த விஷயங்களான விளையாட்டு, பொழுதுபோக்கு என ஈடுபடுவது படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த உதவும்.

இரவு தூக்கத்திற்குப் பின், அதிகாலை நேரத்தில், அதாவது காலை 4 மணி முதல் 8 மணி வரை படிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும். ஏனென்றால் அதிகாலை நேரத்தில் மற்ற இடையூறுகள் குறைவதுடன், தூங்கி எழுந்ததும் படிப்பதால், மூளைத்திறன் சிறப்பாக இருக்கும் என்பது உளவியலாளர்கள் கருத்து.

எந்தப் புத்தகம் நமக்குப் புரியும் வகையில் அந்தப் பாடத்தை விளக்குகிறது என்பதை கண்டறிந்து அதன் உதவியுடன் புரிந்து கொள்வது பலனளிக்கும். மாணவர்களுக்கு எந்தநேரத்திலும் பதட்டப்பட கூடாது. இருக்கும் காலகட்டத்தைப் பிரித்து அட்டவணை உருவாக்கி, அதன்படி நிதானமாக படிப்பதன்மூலம் தேர்வில் நம் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியும்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் மனநிலை தான். மனநிலை திடமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு முன்னர் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும். தேர்வு பயம், மனநெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வு மனப்பான்மை, அதீத நம்பிக்கை, படிக்கும் திட்டம் இல்லாமை, மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தைச் செலுத்தாமை போன்ற விஷயங்கள் நம்மை அண்டவிடக்கூடாது.


கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது,

கல்வித்திறனை அளக்கும் ஓர் அளவுகோல் தான் தேர்வுகள். தேர்வுக்கு எந்த மாதிரி படிக்க வேண்டும் என்பதற்கும் எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கும் வரையறை எதுவும் கிடையாது. சிலர் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் படிக்கலாம். சிலர் மாலையில் படிக்கலாம். சிலர் நள்ளிரவில் விழித்துப் படிக்கலாம். எந்த நேரம் படிக்கிறோம். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி கவனத்துடன் படிக்கிறோம் என்பது முக்கியம்.

தேர்வுக்கு முந்தைய நாளில் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்க வேண்டியதில்லை. தேர்வுக்காக பாடங்களைத் திரும்பத் திரும்ப படித்துப் பார்க்கும் போதுதான் பாடங்கள் மனதில் தங்கும். மாதாந்திர தேர்வுகளின்போது நீங்கள் தவற விட்ட கேள்விகளை முதலில் தெளிவாக படித்துக்கொள்ளுங்கள். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேவையற்ற பயத்தை போக்கி, பிறரிடம் வீணாக பேசுவதை தவிர்த்து பாடங்களை திருப்பி பார்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும். படிக்கும் பாடங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.


(கோப்பு படம்)

நமக்குத் தெரிந்த விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். நிறைய பாடங்களை ஒரே நாளில் ஒரே நேரத்தில் படித்து மனதில் பதிய வைத்துவிட முடியாது. நன்றாகத் தெரிந்த பாடங்களில் மீள்வாசிப்பு செய்வது முக்கியம். அதே சமயத்தில் சரிவர படித்து முடிக்காத பாடங்களுக்குக் கூடுதல் நேரம் கொடுத்து அந்தப் பாடங்களைப் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றைக் குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அதனால் அவை மறந்துபோகாது. படித்ததை எழுதிப் பார்ப்பதும், படங்களை வரைந்து பார்ப்பதும், கணக்குகளைப் போட்டுப் பார்ப்பதும் மாணவர்களின் செயல்திறனை வளர்க்க உதவும்.


(கோப்பு படம்)

தேர்வு சமயங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும். உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது. நேரத்திற்கு உணவைச் சாப்பிட வேண்டும். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடக்கூடாது. அதே சமயம், படிப்பதற்கு முன் வயிறு நிறைய உணவு உண்பதைத் தவிர்க்கவும். தேர்வு நேரம் என்றாலும் உடற்பயிற்சி செய்ய மறக்கக்கூடாது. சிறிது நேர உடற்பயிற்சி மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


பொதுவாகவே நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட தேர்வு என்றாலே பயப்படுகின்றனர். சுமாராகப் படிக்கும் மாணவர்கள்கூட பயப்படுகின்றனர். பள்ளித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பொதுத்தேர்விலும் குறைந்த மதிப்பெண்தான் கிடைக்கும் என்று விரக்தி அடைய வேண்டியதில்லை. மாணவர்கள் தேர்வுகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதுவரை நன்றாகப் படித்த மாணவர்கள் தொடர்ந்து நன்றாகப் படிக்க வேண்டும். இதுவரை, சுமாராகப் பாடங்களைப் படித்தவர்கள் மேலும் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இருக்கின்ற காலத்தை முறையாகப் படிக்கப் பயன்படுத்தினாலே போதும். தேர்வில் வெற்றி பெறமுடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

அதனால், இந்த பொதுத்தேர்வை ஜாலியா எழுதுங்க... சந்தோஷமா ‘என்ஜாய்’ பண்ணி எழுதுங்க... ‘ஈஸி’யா பாஸ் ஆகி விடலாம்.

Next Story
இந்த வகை ஜூஸ் மட்டும் போதும்..! நுரையீரல பளிச்சுனு சுத்தம் செஞ்சிரும்..என்னேனு பாக்கலாமா?