பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம்

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம்
X

தேர்வு அறை - காட்சி படம்  

பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி சந்திப்பதற்கான வழிமுறைகளையும், அதற்கு பெற்றோர் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் இப்பதிவில் பார்க்கலாம்

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான செய்முறை தேர்வுகள் அடுத்த வாரம் முதல் நடைபெற உள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு தங்களின் கனவை நிறைவேற்ற தேவையான அளவிற்கு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அச்சம் தற்போதே ஏற்பட்டிருக்கும். மாணவர்கள் ஆண்டு தோறும் எழுதிய தேர்வினை போல் பொதுத் தேர்வு இருந்தாலும், தேர்வு பயமும், மன அழுத்தமும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த சூழ்நிலையை மாணவர்கள் மற்றும் பெற்றோர் எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தான், மனதும் நன்றாக இருக்கும். அதனால் பொதுத்தேர்வு வரையில் வெளியில் இருந்து உணவுகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்கவும். முடிந்தவரையில் வீட்டிலேயே பயிறு, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுகளை சமைத்து கொடுக்கலாம்..

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களை கொஞ்ச நாட்கள் ஒதுக்கி வைக்கலாம். அதனால் எதையும் இழக்கப் போவதில்லை. எனவே அதில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

தூக்கத்தை தவிர்த்து அதிகமாக படிப்பது தான் சிறந்தது என்ற எண்ணத்தில் மாணவர்கள்இருப்பார்கள். ஆனால் நாம் தான், நன்றாக தூங்கி ஒய்வு எடுத்து பின் படிப்பதே சிறந்தது என்பதை எடுத்துக் கூற வேண்டும். படிக்கும் போது அவர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில், படிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்கள் படிக்கும் முறை மற்றும் நேரத்தில் எதையும் மாற்றம் செய்யத் தேவையில்லை. வருடம் முழுவதும் அவ்வாறு படித்தவர்களுக்கு, எது தங்களுக்கு சரியானது என தெரியும். எனவே புதியதாக எதையும் புகுத்தாமல் இருப்பதே நல்லது.

குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டும். அவர்களிடன் எப்போது தேர்வு, அதற்கு படித்து விட்டாயா? என்பதை தான் கேட்கிறோம், ஆனால் சில சமயம் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அது குறித்து பெற்றோரிடம் கூறினால் அதனை காது கொடுத்து கேட்டு, அதற்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். உங்கள் குழந்தை கூறும் பிரச்னையை நீங்கள் தீர்க்க முடியாவிட்டால், அது குறித்து மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதில் எந்த தவறும் இல்லை.

நன்றாக சாப்பிடுவது, நன்றாக படிப்பது, நன்றாக தூங்குவது இது தான் குழந்தைகளுக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் அவர்களுக்கு தோல்விகளை எப்படி எதிர்க்கொள்வது என்பதை சொல்லித் தருவதில்லை.

குழந்தைகளுக்கு வெற்றி தோல்விகளை எதிர்க்கொள்ளவும் கற்றுத் தர வேண்டும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என பெற்றோர் ஆறுதல் கூற வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோர் மீதான் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே மாணவர்கள் தேர்வு அச்சத்ததில் இருப்பார்கள். பெற்றோர் அழுத்தம் தராவிட்டாலும், அவர்களே அவர்களுக்கு ஒரு குறிக்கோளை நிர்ணயம் செய்து அழுத்தத்தில் இருப்பார்கள். எனவே பெற்றோர் கூடுதலாக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதே போதுமானது.

பொதுத் தேர்வினை எதிர்கொள்வது இந்த தலைமுறை மாணவர்களுக்கு மட்டுமல்ல, எந்த தலைமுறையாக இருந்தாலும் மன அழுத்தத்தை கொடுப்பதாகவே இருக்கிறது. இந்த தலைமுறையினருக்கு அதிகளவில் தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், தவறான தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கிறது. பதின்பருவத்தினை சரியான முறையில் கையாண்டால் நல்ல குடிமகனாக உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

குழந்தைகள் படிக்கும் போது இடையில் ஒய்வு எடுக்கும் வகையில் தூங்குவதற்கு சென்றாலும் அனுமதிக்க வேண்டும். அவ்வாரு மாணவர்கள் தூங்கிய பின் மீண்டும் பெற்றோர் எழுப்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள். எனவே அவர்கள் திட்டமிட்டப்படி படிப்பதற்கும் பெற்றோர் உதவிட வேண்டும்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதனைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஆண்டுத்தோறும் தேர்வினை எழுதி இருக்கிறீர்கள். பொதுத் தேர்வு உயர்கல்வி சேர்க்கையை நிர்ணயிக்க உள்ளதால் தான் முக்கியத்துவம் அளிக்கிறோம். பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வு தான் பொத்தேர்வாக நடக்கிறது. தேர்வின் போது மாணவர்கள் செய்ய வேண்டியவற்றை பள்ளியும், பெற்றோரும் கூற வேண்டும்.

தேர்வு எழுதும் போது முதலில் நன்றாகத் தெரிந்த கேள்விகளை எழுதிய பின், தெரியாத கேள்விகளை யோசித்து எழுதலாம். தேர்வில் படிக்காத பாடத்தில் இருந்து தான் கேள்விகள் வந்துள்ளது என்றால், படித்த பகுதியை முடித்து விட்டு, அமைதியாக அமர்ந்து ஆழந்த நிலையில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்ட பின்னர், உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள். எந்த கேள்விகளையும் விட்டுவிடாமல் எல்லா கேள்விகளையும் எழுதுங்கள்.

முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே மாணவர்கள் இருந்து கொண்டு இருப்பார்கள். பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை, வருத்தமாக இருக்கிறது, அதிகப்படியான படப்படப்பு இருக்கிறது. அன்றாட வாழ்வில் சந்தோஷம் அடையும் செயல்களில் ஈடுப்படமுடியவில்லை, அதில் சந்தோஷம் கிடைக்கவில்லை, தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வருகிறது, உடல் மிக சோர்வாக இருக்கிறது. காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறேன், ஆனால் படிக்க முடியவில்லை உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால், அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என அர்த்தம். இது போன்ற நிலையில் மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை பெறலாம்.

குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர் வீட்டில் டிவி பார்ப்பதை தவிர்க்கலாம். சீரியல், சினிமாவை பார்ப்பவர்கள் அது குழந்தைகளை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளலாம். குழந்தைகளின் நடத்தையிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் இருந்தால் அது எச்சரிக்கை ஒலியாக இருக்கும். இயல்பாக அவர்கள் தனிமையில் தனி அறையில் படிப்பார்கள் என்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால் குழந்தைகளின் நடத்தையிலும், செயல்பாட்டிலும் மாற்றம் இருந்தால் கண்காணிக்க வேண்டியது அவசியம்

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!