தமிழகத்தில் இரு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்த தடை: மாணவர்கள் கலக்கம்

தமிழகத்தில் இரு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்த தடை: மாணவர்கள் கலக்கம்
X

தேசிய மருத்துவ ஆணையம் 

தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்து உள்ளது.

தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) தடை விதித்து உள்ளதால் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

இரு கல்லூரிகளுமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை. அதே வேளையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி. அனுமதி அளித்தது. ஆனால் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதாகவும் அதனால் நடப்பாண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்.எம்.சி. இணையபக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதே போல் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கும் நடப்பாண்டில் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்த கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தற்போது அங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றும் அகில இந்திய கலந்தாய்வில் மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

ஏற்கனவே அங்கு இடங்களை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாற்று தேர்வு இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருந்தது. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வில் மீனாட்சி மருத்துவ கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அதே வேளையில் என்.எம்.சி.யின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே கலந்தாய்வில் வேல்ஸ் கல்லூரியில் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா