சென்னை ஐஐடியில் நாளை அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள் கருத்தரங்கு
பைல் படம்.
சென்னை ஐஐடியின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி (ஐசி & எஸ்ஆர்) அலுவலகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ராமானுஜம் மையமும் (டிஐஏ-ஆர்சிஓஇ) மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து “அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நாளைய தின் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் நடைபெறும் மின்னணு பொறியியல் துறையின் பங்களிப்புடன் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள துறைசார்ந்த வல்லுனர்களை சென்னை ஐஐடி என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே இந்த கருத்தரங்கத்தின் நோக்கம். இதன் மூலம் ஆராய்ச்சி வல்லுநர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், தொழில் வல்லுனர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகாயத்திலும், கடலிலும் ட்ரோன்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், லேசர் எனப்படும் ஊடுஒளியை ஆயுதமாகவும், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளுக்கும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த துறையில் தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் அடித்தளம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் கருத்தரங்கில் நம்முடைய பாதுகாப்புத்துறைக்கான சேவைகளில் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து புகழ்பெற்ற கல்வியியல் வல்லுநர்கள், தொழில்துறை வல்லுநர்கள், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய இந்த கருத்தரங்கம் வாய்ப்பாக அமையும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகிறார். சென்னை ஐஐடியின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் காமகோடி பொன்விழா உரையாற்றுகிறார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தொழில்நுட்ப மேலாண்மை இயக்குனர் திரு ஹரிபாபு ஸ்ரீவஸ்தவா முக்கிய உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து லேசர் தொழில்நுட்பம் குறித்து தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, ஐதராபாத் ஐஐடி, கரக்பூர் ஐஐடி, மண்டி ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்களும் உரையாற்றுகின்றனர்.
இதைத் தவிர, பல்வேறு தொழில் மற்றும் ஆராய்ச்சி கழகங்களைச் சேர்ந்த வல்லுநர்களும் உரையாற்றுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu