ஆகஸ்ட் 21முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 2-ம் கட்ட கலந்தாய்வு
கோப்புப்படம்
தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2023-24 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைகான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 2-ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவா்கள் வருகிற 21ம் தேதி காலை 10 மணி முதல் 22ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
வருகிற 24ம் தேதி காலை 10 மணி முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதைத் தொடா்ந்து வருகிற 31ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பா் 1 முதல் செப்டம்பர் 4ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பா் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu