பிளஸ் டூ தேர்வு முடிவு: அரசு பள்ளிகளில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் டூ தேர்வு முடிவினை ஆர்வமுடன் செல்போனில் பார்த்த மாணவிகள்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அரசு பள்ளிகளில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மொத்தம் 8,863 மாணவர்கள் பிளஸ்-2தேர்வு எழுதினர். இதில் 8,548 பேர் தேர்ச்சி பெற்றனர்.இது 96.45 சதவீதம் ஆகும். ஆண்கள், 4,457பேரில் 4,233 பேர் தேர்ச்சி பெற்றனர். பெண்கள் 4,409 பேரில் , 4,315 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பான பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பக்தவச்சலம் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்ட கலெக்டர் பள்ளி கல்வித்துறைக்கு கவனம் ஒதுக்கி பள்ளிகளில் ஆய்வு செய்து எங்களுக்கு ஊக்கம் அளித்த காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் 96.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேலும் 97.79சதவீதம் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம் . திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu