இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான வாய்ப்பு: 19 சதவீதம் அதிகரித்து சென்னை ஐஐடி சாதனை
பைல் படம்
உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகளை 19% அளவுக்கு அதிகம்பெற்று சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2023-24 தொகுப்பு மாணவர்களுக்காக நடத்திய உள்ளகப் பயிற்சிக்கான ஆள்தேர்வு முகாமின் (Internship Drive) முதல்நாளிலேயே 19 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளகப் பயிற்சிக்கான ஆள்தேர்வு முகாம் ஆகஸ்ட் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
உள்ளகப் பயிற்சிக்கான ஆள்தேர்வு முகாமின் முதல் நாள் அமர்வுகளின் சிறப்பம்சங்கள்:
7 நிறுவனங்களிடமிருந்து 19 சர்வதேச உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன. உள்ளகப் பயிற்சி வாய்ப்புப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீத உயர்ந்துள்ளது. உள்ளகப் பயிற்சிக்காக சென்னை ஐஐடிக்கு வருகைதந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 51 சதவீதம் உயர்ந்துள்ளது.
உள்ளகப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி ஆலோசகர் (ஆள்தேர்வு & உள்ளாக்கப் பயிற்சி) பேராசிரியர் சத்யன் சுப்பையா கூறுகையில், "மாணவர்களின் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையைத் தொடங்குவதற்கு உள்ளாக்கப் பயிற்சி தற்போது இன்றியமையாத அம்சமாக விளங்குகிறது. தாங்கள் படித்த காலத்தில் பெற்ற திறன்களையும் திறமையையும் வாழ்க்கைப் பணிச்சூழலில் உணர்ந்துகொள்ள இப்பயிற்சி அவர்களுக்கு உதவுகிறது. ஏற்றஇறக்கங்கள் உள்ள இந்தச் சூழலிலும் மாணவர்கள் உள்ளகப் பயிற்சி பெறுவதற்கு ஐஐடி குழு மேற்கொண்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
உள்ளகப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இணை ஆலோசகர் (ஆள்தேர்வு & உள்ளாக்கப் பயிற்சி) பேராசிரியர் பி.முருகவேல் கூறுகையில், "கார்ப்பரேட் உலகில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், வகுப்பறையில் தாங்கள் கற்றுக்கொண்டதை நிஜஉலகப் பிரச்சனைகளில் நடைமுறைப்படுத்தவும் மாணவர்களுக்கு உள்ளாக்கப் பயிற்சி உதவுகிறது. முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையாக மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் எமது மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க முன்வந்திருப்பது, தொழில்துறையினர் எங்களது மாணவர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
உள்ளகப் பயிற்சிக்கு அதிக எண்ணிக்கையில் தேர்வுசெய்த நிறுவனங்கள்:
டெக்சாஸ் இண்ட்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ் அண்ட் கோ, அடோப், பிராக்டர் அண்ட் கேம்பிள், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ்
உள்ளகப் பயிற்சி முகாமை ஒருங்கிணைப்பதில் சென்னை ஐஐடி மாணவர் குழுவின் முயற்சிகளை எடுத்துரைத்த, சென்னை ஐஐடி மாணவர் கல்வி விவகாரப்பிரிவு செயலாளர் மேவிட் மேத்யூ கூறுகையில், “சந்தையில் நிலையற்ற சூழல் இருந்துவந்த போதும், எங்களுக்கு முதல்நாளிலேயே வாய்ப்புக் கிடைத்து சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான பொறுப்புகளும், தேர்வுசெய்யும் நிறுவனங்களும் சென்னை ஐஐடி மாணவர்களுக்குக் கிடைத்திருப்பதே அவர்கள் மாறுபட்ட, வலுவான திறன்களைக் கொண்டிருப்பதற்கு சான்றாகும்" என்று தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மாணவர் உள்ளகப் பயிற்சியின் தலைவர் சித்தேஷ் கட்கல் கூறுகையில், "உலகளவில் பாதகமான சூழல்கள் இருந்தபோதிலும் மாணவர்கள் தங்கள் கனவுப் பொறுப்புகளை தொடர உள்ளகப்பயிற்சிக் குழு முனைப்புடன் கடினமாக உழைத்துள்ளது. ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பது, சென்னை ஐஐடி மாணவர்கள் மீது தேர்வுசெய்யும் நிறுவனங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், எங்கள் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகிறது" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu