பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: அதிர்ச்சி ரிப்போர்ட்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: அதிர்ச்சி ரிப்போர்ட்
X
Engineering Admission -அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில் 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Engineering Admission -தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 445 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 3 கல்லூரிகளில் மட்டும் 100% இடங்கள் நிரம்பியுள்ளது. 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பி.இ.., பி.டெக். என பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 13 வரை நடந்தது.

இரண்டு சுற்றுகள் கலந்தாய்வு முடிந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 323 கல்லூரிகளில் 10% இடங்கள் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில் 12 கல்லூரிகளில் மட்டுமே 90% இடங்கள் நிரம்பின. 48 கல்லூரிகளில் 50%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பின. 80 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.

இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் சேர்த்து தற்போது வரை 27,740 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு தெரிவித்திருந்தது.

மேலும், மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் 49,043 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்கு 1,10,701 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 446 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகள் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பின. கடந்த ஆண்டு, மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, ஒன்பது கல்லூரிகள் அனைத்து இடங்களும் நிரம்பின. 90 சதவீத இடங்களுக்கு மேல் நிரம்பிய 33 கல்லூரிகளில் 17 தனியார் கல்லூரிகள்.

173 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களே நிரப்பியுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு 25 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை

100% சேர்க்கை பெற்ற மூன்று கல்லூரிகள் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அண்ணா பல்கலை கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி.

இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, செயற்கை நுண்ணறிவு, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகள் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். பிற பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறைந்துள்ளது குறித்து தமிழக கல்வியாளர்களை கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளில் நிலைமை மோசமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஐடி போன்றவற்றில் எஸ்டி பிரிவின் கீழ் இன்னும் சில இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் 6 பொறியியல் கல்லூரிகளிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், 50% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை .

அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் உள்கட்டமைப்பு பிரச்னைகள் இருப்பதால் அது மாணவர்களை கவரவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்லூரி என்றாலும், மூன்றாம் சுற்று கலந்தாய்வுகளுக்குப் பிறகு 50% இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை. எனவே இது குறித்து அரசும், பல்கலைக் கழகமும் இந்த பிரச்னையை ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தனியார் கல்லூரிகள் மாணவர்களை தங்கள் கல்லூரிகளுக்கு இழுக்க ஆன்லைன் சேர்க்கை செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 7.5% ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் சேர்க்கைக்கு தகுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்ததை இந்த ஆண்டு காண முடிந்தது.

சமீபகாலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருவது கல்வி வளர்ச்சியில் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings