புதிய கல்வி கொள்கை ஏற்பு இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

புதிய கல்வி கொள்கை ஏற்பு இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

எக்காரணம் கொண்டும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடைக்கானலில் நடைபெற்ற வரும் கலைஞர் ஆர்மி பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:-

JABIL தொழிற்சாலை மணப்பாறை சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் அமையுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் 5,000 க்கும் மேற்பட்டோர் பணி வாய்ப்பினை பெற உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் அதிகப்படியான பணி வாய்ப்புகளை பெறுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர். ஆனால் கல்வியில் அரசியல் செய்வது அவர்கள்தான். தாய் மொழியைதான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிக்கையின் மூலமே அறியலாம். குறிப்பாக அறிவியல் நூல்களையும் தொழில் சார்ந்த நூல்களையும் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தையும் நாம் செயல்படுத்தி வருகின்றோம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வழியாக நமது மொழி உரிமையை பாதுகாத்து வருகின்றோம். அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கைதான் நாம் பின்பற்றி வருகின்றோம். இதுபோன்ற வரலாறுகள் நமக்கு இருக்கும் நிலையில் ஒன்றிய அமைச்சர் தாய்மொழி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. நிதியை நிறுத்துவதன் வழியாக 15000 க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது ஒன்றிய அரசு.

புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தர முடியும் என்று என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார் ஒன்றிய கல்வி அமைச்சர்.எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டிய தேவையும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

இது போன்ற சிக்கல்களை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இதை எல்லாம் முறியடித்து தொடர்ந்து கல்வியில் சாதனை புரியும். கல்வியில் என்றும் நாங்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடைக்கானலில் சுற்றியுள்ள பள்ளியில் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், இம்மாவட்ட பள்ளி கல்வித்துறை முதன்மை அலுவலரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் புதிய மேல்நிலைப் பள்ளியும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் பதிலளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!