இந்தியாவில் புதிய கல்வி கொள்கை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் ஆண்டு அமல்
இந்தியா முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ .பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான கல்வி முறை அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில பாட திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் மத்திய கல்வி திட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. ஆகியவை நடைமுறையில் உள்ளன. இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கல்வி முறை அமலில் உள்ளது.
இதன் காரணமாக அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வுகளில் சில மாநிலங்கள் பின்னடைவை சந்திக்கின்றன. எனவே இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான கல்வி முறையை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட புதிய கல்வி கொள்கை குழுவினர் பல்வேறு மாநிலங்களிலும் பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து புதிய கல்வி கொள்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிய கல்வி கொள்கை என்பது நாட்டின் வரலாற்றை மறைத்து இந்துத்வா கொள்கைகளை மாணவர்களிடம் திணிப்பது தான் மத்திய அரசின் நோக்கம். எனவே இதனை அமல்படுத்தக்கூடாது என புதிய கல்வி கொள்கைக்கு எதிரானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல் படுத்துவதில் உறுதியாக தான் உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ-யுடன் இணைந்த அனைத்துப் பள்ளிகளையும் நடப்பு கல்வியாண்டு 2023-24 முதல் அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை அமல்படுத்துமாறு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 இன் உத்தரவுப்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 2022 ஆம் ஆண்டிற்கான அடிப்படை நிலைக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி பள்ளிகள் முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கையை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்து விட்டது. எனவே இந்த பிரச்சினையில் தமிழ்நாடு உள்ளிட்ட புதிய கல்வி கொள்கைக்கு எதிரான மன நிலையில் உள்ள மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu