மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு: கடும் சோதனைகளுடன் முடிந்தது
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மலை கழற்றும் தாய்.
கடும் சோதனைகளுக்கு பின்னர் நடந்த நீட் தேர்வு நாடு முழுவதும் நிறைவடைந்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இராணுவக் கல்லூரிகள் பிஎஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம். தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் நடத்தப்படுகிறது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று (மே 7) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.தேசிய அளவில் 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 2.15 லட்சம் அதிகம்.
தமிழகத்தில் 95,823 மாணவிகளும், 51,757 மாணவர்களும், 1 லட்சத்து 47,581 மாணவர்களும் தேர்வு எழுதி உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது.நாடு முழுவதும் 20.9 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.
தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன் மாணவர்கள் கடுமையாக சோதனையிடப்பட்டனர். நவீன ஸ்கேன் கருவி மூலம் அவர்களது உடல் சோதனையிடப்பட்டது. மாணவிகளின் கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu