விர்ச்சுவல் ரியாலிட்டி கல்வி மாதிரியை உருவாக்கும் ஐஐடி மெட்ராஸ்
பைல் படம்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஏஆர்/விஆர் (ஆக்மெண்டட் ரியாலிட்டி/ விர்ச்சுவல் ரியாலிட்டி) அடிப்படையிலான கற்றலை உருவாக்கி வருகின்றனர். நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்பித்தல்- கற்றல் மாதிரிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த முன்முயற்சியின் இலக்கு என்னவெனில், சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறும் வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை உருவாக்குவதாகும். ஆக்மெண்டட் ரியாலிட்டி/ விர்ச்சுவல் ரியாலிட்டி உலகை உருவாக்குதல், டிஜிட்டல் முறையிலான கதை சொல்லுதல், விளையாட்டுகள் ஆகியவற்றால் கற்றல் செயல்முறை மேலும் வலுப்பெறும். அத்துடன், மாணவர்கள் உயர்கல்வி என்ற போட்டி மிகுந்த களத்திற்கு தங்களைத் தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும்.
இதன் தொடக்கமாக, திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் மெரின் சிமி ராஜ், டாக்டர் அவிஷேக் பாரூய் ஆகியோர் ஆக்மெண்டட் ரியாலிட்டி அடிப்படையில் 'மெமரிபைட்ஸ் (MemoryBytes) எனப்படும் முதல் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர். 500 ஆண்டுகளில் நாடு கடந்த ஆங்கிலோ- இந்திய சமூகத்தின் வரலாற்றை இது படம்பிடிக்கும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய பதிப்புகளில் பயன்படுத்தக் கூடிய இந்த மொபைல் செயலி, புகைப்படங்கள், வரைபடங்கள், காப்பக ஆவணங்களின் அனிமேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை அளிக்கிறது.
தொழில்துறையினர் சிஎஸ்ஆர் மானியமாக வழங்கும் நிதியுதவி, இந்தத் தொழில்நுட்ப சார்ந்த முன்முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்த உதவியாகவும் இருந்து வருகிறது.
அனைத்து நாடுகளிலும் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்" என்ற ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்கு #4-ஐ இந்தியா அடைவதற்கு இந்தத் திட்டம் உதவும்.
சமூகத் தாக்கத்தை ஆழமாக ஏற்படுத்தும் திறன் கொண்ட இதுபோன்ற திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கு தொழில்துறையினரின் பங்களிப்பை விளக்கிய, ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "ஏஆர்/விஆர் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் மூலம் அதிவேக கற்றல் அனுபவங்களை உருவாக்குவதன் வாயிலாக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கல்வியை மறுவரையறை செய்ய முடியும்" என்றார்.
ஏஆர்/விஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பித்தல் கருவிகளை உருவாக்கி, கையடக்கத் தளங்கள் மூலம் மெய்நிகர் அணுகல் மற்றும் இயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் இத்திட்டம் கல்விப் புரட்சிக்கு வழிகோலும். அத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே இருந்துவரும் 'டிஜிட்டல் இடைவெளியை' இணைக்கும் பாலமாகவும் அமையும்.
இந்த முன்முயற்சியின் இலக்குகள் பற்றிக் குறிப்பிட்ட ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைப் பேராசிரியரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் மெரின் சிமி ராஜ் கூறுகையில், "அணுகக் கூடிய, குறைந்த செலவிலான அதிவேகக் கற்றல் அனுபவங்களை டிஜிட்டல் முறையிலான இக்கல்வி வழங்குவதுடன், பல்வேறு துறைகளில் பணிபுரியும் நிபுணர்களை இணைக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இயற்பியல் வகுப்பறைகளில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் ஏஆர்/விஆர் அடிப்படையிலான கற்பித்தல்- கற்றல் மாதிரிகளை உருவாக்க இத்திட்டம் முயற்சிகளை மேற்கொள்ளும்" என்றார்.
ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அவிஷேக் பாரூய் கூறும்போது, "மானுடவியல், பாரம்பரியம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்பாகச் செயல்படும் ஐஐடி மெட்ராஸ் நினைவக ஆய்வு மையத்தில் (Centre for Memory Studies) மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இதுபோன்ற திட்டங்கள் அமைந்துள்ளன. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், எக்ஸ்ஆர் கருவிகள்/தயாரிப்புகள் மூலம் ஆற்றல்மிக்க, உண்மையான கற்றல் அனுபவங்கள் பற்றிய ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu