ஆயிரக்கணக்கான தொழில்நுட்பப் படிப்புகளை மொழிபெயர்த்த ஐஐடி

ஆயிரக்கணக்கான தொழில்நுட்பப் படிப்புகளை மொழிபெயர்த்த ஐஐடி
X

பைல் படம்.

ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பப் படிப்புகளை இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பப் படிப்புகளை இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் தமிழில் மொழிபெயர்த்துள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மேலும், 906 மணி நேரத்திற்கு வீடியோ உள்ளடக்கத்திற்கான ஆடியோ உட்பொதிகளும் கிடைக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

என்பிடெல் பாடங்கள் அசாமிய, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் என்பிடெல்லின் மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் காணலாம் - https://nptel.ac.in/translation

தொழில்நுட்பப் பாடங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சி குறித்து எடுத்துரைத்த என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார் கூறும்போது, “ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் என் உலகத்தின் எல்லைக்குள்ளேயே முடங்கி விடுவேன். அந்தத் தடையைத் தகர்த்தெறிவதற்கான முயற்சியில் என்பிடெல் ஈடுபட்டுள்ளது” என்றார்.

என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ் புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

என்பிடெல் ((தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2003-ம் ஆண்டு ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.

என்பிடெல் தனது நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு செமஸ்டருக்கும் 22 வெவ்வேறு துறைகளில் 700-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான சான்றிதழ்களை என்பிடெல் வழங்கி வருகிறது.

தற்போது வரை, 163 பொறியியல் படிப்புகள் உள்பட 244 என்பிடெல் படிப்புகளில் 20,000 மணி நேர வீடியோ உள்ளடக்கம் வெற்றிகரமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துல்லியத்தை உறுதி செய்வதற்கும் ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் (ஒலிமாற்றம் செய்யப்பட்டவை) இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிரான்ஸ்க்ரிப்ட்கள் எளிதான குறிப்புகளுக்காக புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. என்பிடெல் இணையதளத்தில், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பக்கத்திலும், ஸ்வயம் இணைய முகவரியிலும் தற்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் 980 புத்தகங்கள் கிடைக்கின்றன.

என்பிடெல்லின் முயற்சியால் ஏற்படும் தாக்கம் குறித்துப் பேசிய மின்சாரப் பொறியியல் துறையின் நான்காமாண்டு மாணவர் டி.மாதவன் கூறும்போது, “என்பிடெல்லின் தமிழ்மொழி உரைப் பிரதிகளின் ஒருங்கிணைப்பு, தமிழ் பேசும் மாணவர்களுக்கான அணுகலையும் புரிதலையும் கணிசமான அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கல்வியில் உள்ள மொழிப் பிரச்சனையைக் குறைக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!