திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா
திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை (ஜூலை-28) நடைபெற உள்ளது.
இப்பயிலகத்தின் வைர விழா ஆண்டாகிய இப்பொழுது, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அதாவது 2155 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர் சௌமித்ர பட்டாச்சாரியா பாஷ்(Bosch) பன்னாட்டுக் குழுமத்தின் மண்டலத் தலைவரும், முந்தைய நிர்வாக இயக்குனரும் ஆவார். பட்டாச்சாரியா தமது 39 ஆண்டு கால தொழில் அனுபவத்தில் டாட்டா ஸ்டீல், இண்டால் (இந்திய அலுமினியம் கம்பெனி லிட்.) மற்றும் டைடன் நிறுவனங்களிலும் உயரிய மேலாண்மைப் பதவிகளை வகித்துள்ளார்.
இந்த விழாவில் என்ஐடி இயக்குனர் அகிலா 2155 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார். அதில் 1090 மாணவர்கள் தொழில்நுட்பத்திலும், 44 மாணவர்கள் கட்டிடக்கலையிலும் இளங்கலைப் பட்டம் பெறுகின்றனர். மேலும் முதுகலை மாணவர்களில் 538 பேர் தொழில்நுட்பத்திலும், 22 பேர் கட்டிடக்கலையிலும், 89 பேர் அறிவியலிலும், 108 பேர் கணிப்பொறி பயன்பாடுகளிலும், 19 பேர் கலையிலும், 92 பேர் வணிக மேலாண்மையிலும், 19 பேர் அறிவியல் ஆய்விலும் பட்டம் பெறுகின்றனர். இன்னும் 142 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கத்தை மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சௌந்தர்யா என்ற மாணவி பெறுகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, திருச்சி என்ஐடி தேசியப் பயிலகத் தரவரிசைக் கட்டமைப்பின் (என்ஐஆர்எப்) பட்டியலில் நாட்டின் முதன்மை தேசிய தொழில்நுட்பக் கழகமாக இடம் பெற்றிருக்கிறது. தேசிய அளவில் 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் பொறியியலில் ஒன்பதாவது இடத்தையும், கட்டிடக்கலையில் நான்காவது இடத்தையும், மேலாண்மையில் 35 வது இடத்தையும் பெற்றுள்ளது. இச்சிறப்பு பயிலகத்தின் கல்வித்தரம் மற்றும் ஆராய்ச்சியின் ஆளுமைக்கும், வளர்ச்சிக்கும் சான்றாகும்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தில் உயர்கல்வியின் சிறப்பு என்ற மாநாட்டில், இப்பயிலகம் தேசிய அளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றமைக்காக கௌரவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் வைர விழா ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை 2020க்குத் தகுந்தவாறு, மாணவர்களின் பல்துறை விருப்பங்களுக்கேற்ற தகவமைப்பு பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல், உயர்கல்விப் பயிலகங்களினிடையே கல்விசார் மதிப்பீடுகளின் பரிமாற்றம் ஆகியவை செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் சீர்மிகு பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சி என்ஐடி திறன் மேம்பாட்டு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் மூலம் 95% இளங்கலை மாணவர்களும், 85% முதுகலை மாணவர்களும் உயரிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இணைந்துள்ளனர். முடிந்த நிதியாண்டில் திருச்சி என்.ஐ.டி. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக் கழகம்(MPDI) மற்றும் இந்திய அரிய மண்கூறுகள் நிறுவனம் (IREL) ஆகியவற்றுடன் சீரிய கூட்டாராய்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்தியத் தரநிலைகள் பணியகத்துடன் (BIS) அடுத்த 10- ஆண்டுகளுக்கான ஒப்பந்தமும், மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவன (MSME) அமைச்சகத்துடன் 4-வருட கூட்டு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது. டேட்டானெடிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பயிலகத்தின் உள்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான வசதிகள் பன்னாட்டுத் தரங்களுக்கிணங்க உயர்த்தப்பட்டுள்ளன.
"யுவ சங்கம் 2023" நிகழ்ச்சியின் கீழ், NITT ஒருங்கிணைக்கும் அமைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன்(IIT-Patna), மாணவர்களுக்கு இடையேயான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, மத்திய அரசாங்கத்தால் இப்பயிலகம் பெரிதும் பாராட்டப்பட்டது.
வேதியியல் துறையின் பேராசிரியர் முனைவர் கார்வேம்பு அவர்கள், வேதியியலின் உயரிய ஆராய்ச்சி சமூகமான ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியின் (Royal Society of Chemistry) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். இவரின் சாதனை, இப்பயிலகத்தின் ஆசிரியர்களின் சீரிய ஆராய்ச்சித் தரத்துக்கான ஓர் எடுத்துக்காட்டு.
மண்டலப் பொறியியல் கல்லூரி (REC) / தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (NIT) முன்னாள் மாணவர் சங்கம் RECAL, இங்கு தற்போது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் தமது பேராதரவை ஒருங்கே அளித்து வருகின்றது. இது பயிலகத்தில் மேற்கொள்ளும் கற்றல்-கற்பித்தல், அறிவியல் ஆய்வு மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட செயல்களுக்கு உறுதுணையாக உள்ளது. "RECAL Cares" என்ற முயற்சியின் மூலம் பெருந்தொற்றுக் காலத்தில் பயிலக வளாகத்தில் போற்றத்தக்க சேவை புரிந்தது.
திருச்சி என்ஐடி தேசத்தின் மேம்பாட்டில் பெரிதும் பங்கு வகிக்கிறது. நம் தமிழகத்தில் சீரிய தொண்டாற்றும் இப்பயிலகம், உலகளாவிய சிறப்புகளையும் தன்னகத்தே பெற்றிருக்கிறது. இங்கு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவை அவர்களை உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்துகின்றன. அவ்வாறே மாணவர்கள் உலகளாவிய திறன்களைப் பெற்று ஒளிர, இப்பயிலகம் கல்விசார் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், மேலாண்மை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளின் மூலம் நிறைய வாய்ப்புகளை ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது.
இந்த தகவல்களை திருச்சி என்.ஐ.டி.யின் இயக்குனர் அகிலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu