உங்கள் குழந்தை தேர்வில் கவனம் செலுத்தணுமா? இதையும் கொஞ்சம் கவனியுங்க

உங்கள் குழந்தை தேர்வில் கவனம் செலுத்தணுமா? இதையும் கொஞ்சம் கவனியுங்க
X
அடடே, தேர்வு நேரம் நெருங்கிவிட்டது; கூடவே, கோடை காலமும் தான். மொபைல் போனில் மூழ்கியுள்ள உங்கள் குழந்தைகள், இனி பாடப் புத்தகங்கள் பக்கம் திருப்ப வேண்டும்; தேர்வுக்கு அவர்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டும்.

தேர்வு காலங்களில் மாணவர்கள் பாடத்தில் மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இதோ, சில எளிய டிப்ஸ்...

முதலில், தேர்வு ஜுரத்தை மாணவர்களிடம் இருந்து போக்க வேண்டும். குறிப்பாக, 10வது, 12வது மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு குறித்த பதற்றம் இருக்கும். பெற்றோர்கள் தான், தன்னம்பிக்கை என்ற டானிக்கை தர வேண்டும்.

மாணவர்களை வெறும் மதிப்பெண் இயந்திரங்கள் போல் கருதி, செண்டம் எடுக்க வேண்டுமென்று, அவர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது. இயல்பாக படித்து, பயமின்றி தேர்வெழுத்த ஊக்கப்படுத்துங்கள்.

மாணவ, மாணவியரை, சில நிமிடங்கள் ஒதுக்கி தியானம் செய்யச் சொல்லுங்கள். அட, புத்தகத்தையே தியானப் பொருளாக கருதி, அங்கும் மனதை சிதற விடக்கூடாது.

உணவில் கவனம் தேவை

வருடம் முழுவதும் கடினமாக படித்து, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி இருப்பார்கள். ஆனால், தேர்வு நாளில் உடல் உபாதை வந்து, மொத்தத்தையும் பாழ்ப்படுத்திவிடக்கூடும். எனவே, தேர்வெழுதும் மாணவர்கள், தேர்வுக்கு முன்பிருந்தே உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

எதை தவிர்க்கலாம். எதை சேர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில், பெற்றோர்கள் தான் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, பொதுத்தேர்வு நடைபெறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், வெயில் சுட்டெரிக்கும் காலம். எனவே, மாணவர்களுக்கு உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, கோடைக்கேற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். தேவையான தண்ணீர் பருகாவிட்டால், சரும வறட்சி உண்டாகும். உடலில் நீர்ச்சத்தும் குறையும். செயற்கை பானங்களுக்கு பதில், மோர் அல்லது இளநீர் பருகலாம். இதனால், குடல் பகுதியில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகரிக்கச் செய்து, செரிமானப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும்.

புரத உணவுகள் புத்துணர்வு தரும்

இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பதற்கு பதில், சீக்கிரம் உறங்கி, அதிகாலையில் படிப்பது, மனதில் நன்கு பதிய உதவும். தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால், அசைவ உணவுகளால், செரிமானக் கோளாறு ஏற்படலாம். அதுமட்டுல்ல, கோடை வெப்பத்தால், வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு முளைகட்டிய பயிறு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவை ஏற்றது. கடலைமிட்டாய், எள் உருண்டை போன்றவையும் எனர்ஜி தரக்கூடியவை. சுவையான காய்கள் நிறைந்த சூப் வகைகளை அருந்தலாம். பருப்பு சேர்ந்த கீரை உணவுகள், புரதங்களோடு சேர்த்து நுண்ணூட்டங்களையும் மாணவர்கள் உட்கொள்ளலாம்.


தேர்வு நேரத்தில், பீஸா - பர்க்கர் போன்றவரை அறவே தள்ளிவிடுங்கள். எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா வேண்டவே வேண்டா! அதற்கு பதிலாக, இயற்கை தரும் கொடையான ஃபுரூட் சாலட் சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிடுவதால், மனதை உற்சாகமாக்கக்கூடிய 'செரடோனின்' (Serotonin) ஹார்மோன் சுரக்கும்.

படிப்புக்கு இடையே, சோர்வை போக்க, டீ, காபி குடிக்கலாம். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு அல்லவா? முதலில் உற்சாகம் தரும் இவை, அதிகளவு உட்கொண்டால், அயற்சி ஏற்படுத்தும். உடலுக்கு உற்சாகம் தரும் உப்பு கலந்த எலுமிச்சை சாறு, பழச்சாறு பருகலாம்.

தேர்வுகள் வந்துவிட்ட சூழலில், உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டம் மிகுந்த உணவு, உடலுக்கு புத்துணர்வை தரும்; உள்ளத்துக்கு உற்சாகம் தரும். அது, அவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை தரும்.

நல்ல விஷயங்களை நாம மட்டும் படிச்சா போதுமா? நாலு பேருக்கும் தெரியப்படுத்த வேண்டாமா? இந்த டிப்ஸ் நீங்கள் அன்பு காட்டும் நல்ல உள்ளங்களுக்கும் பகிரறலாமே!

Tags

Next Story