ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம் எச்சரிக்கை
ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024 -25 ஆம் கல்வி ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்ற றிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பொது மாறுதலுக்கு முன்னுரிமை கூறும் போது அதற்கான காரணம் குறித்த சான்றிதழ் முதன்மை கல்வி அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் எமிஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்ட உடன் சேர்க்கை ,நீக்கம், திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடம் அளிக்காமல் செயல்பட வேண்டும்.
கணவன் மனைவி முன்னுரிமை மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகம் அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கணவன் மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிலோமீட்டர் உள்ளதை சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலி பணியிடத்தையே தேர்வு செய்ய வேண்டும். மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu