சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கே வேலை இல்லையா? வெளியானது அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் உள்ள டாப் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் படிக்கும் 45 சதவீதமாணவர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இப்போது நாம் கல்வியாண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். ஆனாலும் பல்வேறு கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.
இதற்கிடையே இது தொடர்பாக அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதாவது சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டு இருந்தது. பொதுவாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை வேலைக்கு எடுக்க வரிசை கட்டி நிற்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் மாணவர்கள் ப்ளேஸ் ஆனதாகத் தகவல்கள் வெளியாகிப் பார்த்து இருப்போம். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறாக நிலைமை இருப்பதாகவும் சுமார் 45 சதவீத ஐஐடி மாணவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு இருந்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் எப்போதும் முதலில் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் தான் முதலில் ஆள் எடுப்பார்கள். அதன் பின்னரே மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை வேலைக்கு எடுப்பார்கள். இப்போது ஐஐடி கல்வி நிறுவனத்திலேயே வேலைக்கு எடுக்கவில்லை என்றால் வேலைவாய்ப்பு சந்தை மிக மோசமாக இருப்பதாகப் பொருள் என்றெல்லாம் பலரும் குறிப்பிட்டார்கள். இதற்கிடையே இந்த ரிப்போர்ட் தொடர்பாகச் சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது. அதாவது சென்னை ஐஐடியில் பிளேஸ்மெண்ட் புரோகிராம் தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். கல்வியாண்டில் எத்தனை பேர் பிளேஸ் ஆகியுள்ளனர் என்பது 2024 ஜூலை மாதம் பட்டமளிப்பு விழாவுக்கு பிறகே தெரிய வரும் என்று அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது..
இது தொடர்பாகச் சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐஐடி மெட்ராஸில் பிளேஸ்மெண்ட்கள் இன்னும் தொடர்கின்றன. மேலும், மாணவர்களுக்குப் பல விருப்பங்கள் உள்ளன. சில மாணவர்கள் உயர் கல்வி கற்க முடிவு செய்துள்ளனர். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் சிலர் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகவும் முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் இந்த முடிவுகளை எடுக்க சில காலம் ஆகும். 2024 ஜூலை இறுதியில், பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகே வேலை வாய்ப்பு குறித்த டேட்டா நமக்குக் கிடைக்கும்" என்றார்.
இது தொடர்பாக ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான தீரஜ் சிங் சமீபத்தில் ஆர்டிஐ மூலம் சில தகவல்களைப் பெற்றிருந்தார். அதை வைத்து தான் அவர் இந்தாண்டு 45சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்காது என கூறியிருந்தார். அதற்கே இப்போது சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது.
அந்த முன்னாள் மாணவர் வெளியிட்ட ரிப்போர்ட்டில், ஐஐடி மாணவர்கள் வேலை கிடைக்காமல் வெளியேறுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு, ஐஐடிகளில் வேலை இல்லாமல் வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தீரஜ் சிங் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஆண்டு பிளேஸ்மெண்ட்களுக்காக 2,100 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,150 மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை வேலை கிடைத்துள்ளதாம். மேலும் 950 மாணவர்கள் இன்னும் வேலை கிடைக்காமல் காத்திருப்பதாகவே அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதை வைத்துப் பார்க்கும் போது சுமார் 45.2சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu