அச்சமில்லை... அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே...பாரதிகவிதைகள்
Achamillai Bharathiyar Kavithaigal
சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி. "
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் . தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
" தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
படவிளக்கம்: எட்டயபுரத்திலுள்ள பாரதி வீடு
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசகதி வையத்தேவி;
தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டியைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமஹா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள்.
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,
பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி,
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,
சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.
படவிளக்கம்: திருவல்லிக்கேணியிலுள்ள பாரதி நினைவு இல்லம்
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தில் எதற்கும்இனிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்;
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியிலேதுவந்தால் எமக்கென் னென்றே.
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)
பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)
அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)
அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu