நல் வாணிபம் செய்வோம்: அவினாசி அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கு
அவினாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் சர்வதேச வணிகம் துறை சார்பில், இன்று நடைபெற்ற "நல் வாணிபம் செய்வோம்" என்ற கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.
இந்த நிகழ்வில், முதல்வர் ஜோ. நளதம் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை, ஆனந்த் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அவினாசி சக்திவேல் குழுமத்தின் எஸ்.சக்திவேல் பங்கேற்று பேசுகையில், சுய தொழில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் மற்றும் தொழில் செய்தலில் உள்ள சமூகப் பொறுப்பு பற்றி கூறினார்.
நிறுவனத்தை தொடங்குதல், அதற்கான மூலதனம், தொழில் செய்ய வங்கியில் கடன் பெறுதல், அரசின் உதவியை நாடுதல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வணிகராக நாமும், நம்முடன் பயணிக்கும் தொழிலாளரும் நம் வாடிக்கையாளரும் இந்த ஒட்டுமொத்த சமூகமும் ஜெயிக்கும் படியும்/ பயனடையும் படியும் வணிகம் செய்தால், அனைவரும் நல் வாணிபம் செய்யலாம் என்று சக்திவேல் கூறினார்.
இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த, கல்லூரியின் சர்வதேச வணிகம் துறை தலைவர் பாலமுருகன் பேசுகையில், சிறப்பு விருந்தினர் சக்திவேல், கொரோனா காலத்தில் ஐந்து கிலோ அரிசி கூட வாங்க இயலாதோருக்கு இலவசமாக அரிசி வழங்கியதையும், சமீபத்தில் தன்னுடைய 69வது கடையின் திறப்புவிழாவில், தூய்மைப்பணியாளரை சிறப்பு விருந்தினராக பங்கேற்கச் செய்து, கடையினை திறந்ததையும், 100 தூய்மைப் பணியாளருக்கும், 100 செவிலியர்களுக்கும் தலா ஐந்து கிலோ அரிசியினை இலவசமாக வழங்கியதையும் நினைவுகூர்ந்தார்.
சமூகத்தில் மாற்றங்கள் செய்ய, உவந்த காரணிகள் கலையும், வணிகமுமே. எனவே வணிகம் செய்து அதன்மூலம் நல்வாழ்வும் பெற்று, தங்களுடன் சேர்ந்து இச்சமூகத்தினையும் வளப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார். விழா இறுதியில், ஜீவா நன்றி கூறினார். இதில், துறைசார்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu