ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னையில் நன்றி அறிவிப்பு மாநாடு
நன்றி அறிவிப்பு மாநாடு தொடர்பாக திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக சென்னையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
தொடக்க கல்வித்துறையில் மாநில அளவில் முன்னுரிமை வழங்கி அரசாணை 243 வெளியிட்ட பள்ளி மாண்புமிகு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை கல்வி அமைச்சர் தலைமையில் நன்றி அறிவிப்பு மாநாடு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வி துறையின் கீழ் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வட்டார அளவிலான பணி மூப்பு பின்பற்றி வந்தது. இதனால் பதவி உயர்வு, இடம் மாறுதலில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பள்ளிக் கல்வித் துறையை போல மாநில அளவிலான சீனியாரிட்டி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை டுத்து தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கும், மாநில அளவிலான பணி மூப்பு வழங்கி சமீபத்தில் அரசாணை 243 வெளியிடப்பட்டது.
இதனை வரவேற்றுள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நன்றி அறிவிப்பு மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உதுமான் அலி கூறியதாவது:-
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் நடைமுறையில் உள்ளது போல் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் மூதுரிமையை அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க அரசாணை 243 அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலின் போது இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு பாதிக்காமல் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் இனி பதவி உயர்வு மற்றும் மீண்டும் மாறுதலும் பெறலாம். இடைநிலை ஆசிரியருக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
குறிப்பாக கடந்த 19 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இதுவரை இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட்டு தான் செல்ல முடிந்தது. தற்போது அவர்கள் தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராகவே மாறுதல் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதியான தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாவிட்டால் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசாணை 243 ல் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் இம்மாநாட்டில் எங்களது வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் இரத்து செய்திடவும், 2004-2006 வரை தொகுப்பூதியத்திய காலத்தை பணிக்காலமாக மாற்றிடவும், தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் 50% பணியிடத்தை வழங்கிடவும், அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் துறையில் சேர்ந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கிடவும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்திடவும், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்கிடுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 10000க்கும் அதிகமாக ஆசிரியர்கள் கலந்தது கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையிலும்,மாநில செயலாளர் அருள்குமார் முன்னிலையிலும் திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில சட்ட ஆலோசகர் நேதாஜி, மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, ஒன்றியப் நிர்வாகிகள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் சார்பாக மாநாட்டில் சுமார் 400 பேர் மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது .
முடிவில் மாவட்ட பொருளாளர் திருமாவளவன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu