அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
X
Abdul Kalam Life History in Tamil-தலைசிறந்த விஞ்ஞானியும், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவருமான பாரத் ரத்னா ஏபிஜெ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம்.

Abdul Kalam Life History in Tamil-அற்புதமான பேச்சாளர், பார்போற்றும் விஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன், தலைசிறந்த ஆசிரியர், அனைவராலும் விரும்பப்படும் எளிய மனிதர், சிறந்த நூலாசிரியர், இந்தியாவின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவர், இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரான, ஏ.பி.ஜே அப்துல் கலாம், இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவர்.

கடந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15ஆம் நாளில் பிறந்தார் கலாம். இவரது தந்தை, ஜைனுலாப்தீன்; தாய் ஆஷியம்மா. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் பிறந்தார். இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில், பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார்.

குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், படிக்கும் காலத்திலேயே குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில், செய்தித்தாள்கள் விநியோகம் உள்ளிட்ட வேலைகளை செய்தார். கல்லூரி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார்.

கடந்த 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1955ல், விண்வெளி பொறியியல் படிப்பை சென்னை எம்.ஐ.டி-யில் தொடங்கினார். 1960 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

விண்வெளித்துறையில் புரிந்த சாதனைகளுக்காக, 1981 ஆம் ஆண்டு"பத்ம பூஷன்" விருது பெற்றார் கலாம். 1999 ஆம் ஆண்டு, பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான, பாரத ரத்னாவை, மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

கடந்த 2015, ஜூலை 27ல் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து காலமானார்.

ஏ.பி.ஜே அப்துல் கலாம், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் முக்கியமானவை, அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள். பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், "கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்" என்ற அவரது வார்த்தைகளும் என்றும் நமக்கெல்லாம் ஒரு உந்துகோலாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இந்த வகை ஜூஸ் மட்டும் போதும்..! நுரையீரல பளிச்சுனு சுத்தம் செஞ்சிரும்..என்னேனு பாக்கலாமா?