பள்ளிகளிலேயே எல்.கே.ஜி. வகுப்புகள்: அரசுக்கு அதிமுக கோரிக்கை
இது தொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் முடக்கபப்டுகின்றன. அம்மா மினி கிளினிக், அம்மா உணவகங்கள், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கலை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதிமுக அரசின் திட்டம் மூலம், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, பெற்றோர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. தற்போது, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், "எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்" என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அப்படியென்றால், எல்கேஜி, மற்றும் யுகேஜி மாணவ, மாணவியருக்கு எந்த ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள்? அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியை பறிக்கும் செயல் என்பது மட்டுமல்லாமல் சமூக நீதிக்கும் எதிரான செயல். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறையும் நிலை உருவாகும்.
எனவே, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu